பாகுபலி என்னும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குநர் ராஜமௌலி கையில் எடுத்திருக்கும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது. ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகிறது.
ஆர்.ஆர்.ஆர். படம் தெலுங்கில் வெளியாக ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் வெளியாகி ஒரு நாள் முடிவில் ரூ.60 கோடி வசூலாகி இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில், பாகுபலி முதல் நாள் காட்சியில் வசூல் செய்த ரூ.43 கோடி சாதனையை இது முறியடிக்கும். தெலுங்கு மாநிலங்களில் இப்படம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்.
இந்த திரைப்படம் இந்தியில் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வசூலாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, கேளரா போன்ற மாநிலங்களிலும் படம் வெளியாகும் முன்னரே முன்பதிவு தொடங்கியதால், நிச்சயம் பெரிய அளவில் வசூல் ஆகலாம்.
ஆர்.ஆர்.ஆர். திரைப்படம், முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியாவில் மட்டும் 7 லட்சம் டாலர்கள் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, விஜயின் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் 253 ஆயிர டாலர் மட்டுமே வசூலித்திருந்தது. மாஸ்டர் பட சாதனையை ஆர்.ஆர்.ஆர். படம் முறியடித்துள்ளது.
திரைப்பட தயாரிப்பாளரும் வர்த்தக ஆய்வாளருமான கிரிஷ் ஜோஹர், பாக்ஸ் ஆபிஸில் இந்தப் படத்திற்கு ஒரு பெரிய தொடக்கத்தை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ” இந்தியாவில் மட்டும் அனைத்து மொழிகளிலும் சுமார் ரூ. 150 கோடி வசூலை எதிர்பார்க்கிறேன்." என தெரிவித்துள்ளார்
ராஜமௌலி இயக்கிய 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமான படம் என்பதால், மார்ச் 22 செவ்வாய்க்கிழமை முதல் இந்தப் படத்தின் முன்பதிவு தொடங்கி சுமார் 750 கோடிகள் வரை சம்பாதித்துள்ளது. இதன்முலம், ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் 2022-ம் ஆண்டு வெளியான நம்பர் ஒன் படம் என்ற சாதனையை படைத்தது.கீரவாணி இசையமைத்துள்ள இப்படத்துக்கு கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவாளர்.