Crime: தலைநகர் டெல்லியில் ரஷ்யா இளம்பெண்ணிடம், இளைஞர் ஒருவர் ஆபாச வார்த்தைகளால் பேசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


வெளிநாடுகளில் இருந்து பலரும் இந்தியாவுக்கு சுற்றுலா வருகின்றனர். அப்போது, இந்தியாவில் சுற்றிப் பார்க்கும் இடங்களை வீடியோவாக எடுத்து தங்களின் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி, இந்தியா வரும் பெண்களிடம், சிலர் அத்துமீறி நடந்துக் கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. சமீபத்தில் கூட தென்கொரியாவைச் சேர்ந்த பெண் யூடியூபருக்கு, இளைஞர் ஒருவர் முத்தமிட்டு, அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


ரஷ்ய பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்:


அதைத் தொடர்ந்து தற்போது, ரஷ்யாவைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் ஒருவர் தவறாக நடந்துக் கொண்டு இருக்கிறார். இது சம்பந்தமான காட்சிகள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 'koko In India’ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவர்,  பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்குள்ள கலாச்சாரம், பண்பாடு தொடர்பான வீடியோக்களை, தனது சேனலில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இந்தியா வந்துள்ள இந்த பெண், பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டு வீடியோவை பதிவிட்டு வருகிறார்.  இந்நிலையில், இவர் டெல்லியில் உள்ள சரோஜினி  நகரில் இரவில் சென்றுக் கொண்டிருந்தார்.  வீடியோ எடுத்துக் கொண்டே தெருவில் நடந்துக்  கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு இளைஞர், இளம்பெண்ணை பின்தொடர்ந்து பேச்சு கொடுத்தார்.


ஆபாசமாக பேசிய இளைஞர்:


அப்போது அந்த நபர், "நீங்கள் என் நண்பராக இருக்க முடியுமா? என கேட்டார். இதற்கு அந்த பெண் இந்தியில், "எனக்கு உங்களை தெரியாது” என்று பதிலளித்தார்.  இதனை அடுத்து அந்த இளைஞர், " நாம் இருவரும் நண்பர்களாக இருந்து, ஒருவரையொருவர் தெரிந்து கொள்வோம்" என கூறினார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து, ”தனக்கு புதிய நண்பர்கள் யாரும் வேண்டாம்” என்று கூறினார். அதற்கு பிறகும் அவரை பின்தொடர்ந்த இளைஞர், "நீங்கள் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறீர்கள்"  என தெரிவித்தார்.


இந்த சம்பவத்தை அந்த பெண் தனது யூடியூப் சேனலில் பதிவிட்டார். இதனை பார்த்த பலரும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், அந்த பெண் இதுவரை காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. ரஷ்ய இளம்பெண்ணிடம், இளைஞர் அத்துமீறியது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.




மேலும் படிக்க


Crime: சீர்காழி அருகே அனுமதியின்றி தயார் செய்யப்பட்ட நாட்டு வெடி.. அதிரடியாக கைது செய்யப்பட்ட 3 பெண்கள்..!