16 வயதினிலே படப்பிடிப்பு தளத்தில் பாரதிராஜா எல்லா எடுபிடி வேலைகளையும் செய்து கொண்டிருப்பார் என்று கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.


லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா என பெரிய பட்டாளமே நடித்துள்ள மல்டி வெர்ஸ் வகையறா படம் தான் விக்ரம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் வெற்றியை அங்கீகரித்து, லோகேஷ் கனகராஜூக்கு புதிய ஆடி காரை பரிசாக அளித்தார் கமல்ஹாசன். நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரம் ஒன்றையும் கமல்ஹாசன் பரிசாக அளித்தார். திரையரங்குகளைத் தொடர்ந்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஜூலை 8ம் தேதி வெளியானது. ஓடிடியிலும் விக்ரம் படம் சக்கைப்போடு போட்டது.


இந்நிலையில், விக்ரம் படத்தின் 50வது நாள் வெற்றிவிழாவை ஒட்டி யூடியூப் தளத்திற்குப் பேட்டியளித்திருந்தார் நடிகர் கமல்ஹாசன். அந்தப் பேட்டியில் 16 வயதினிலே படத்தைப் பற்றிப் பேசியிருந்தார். 


அந்தப் பேட்டியில் அவர், 16 வயதினிலே திரைப்படம் தான் பாரதிராஜாவின் முதல் திரைப்படம். அந்தப் படத்திற்காக பாரதிராஜா போட்ட எஃபர்ட்ஸ் விவரிக்க முடியாதவை. அவருடைய திறமையை தமிழகம் இன்றும் கொண்டாடுகிறது. அந்த முதல் படத்திற்காக பாரதிராஜாவின் மெனக்கிடலை சொல்லியே ஆக வேண்டும். அவர் செட்டில் எல்லா எடுபிடி வேலைகளையும் செய்வார். யாருப்பா டைரக்டர் என்று கேட்கும் அளவிற்கு எளிமையாகத் திரிவார். உண்மையில் சொல்லப்போனால் தலையை சொரிந்து கொண்டு அவர்தான் சப்பாணி போல் திரிவார்.




படத்தில் சப்பாணி கேரக்டர் நகைப்புக்குரியது அல்ல. அந்த கேரக்டரை சுற்றி நகைச்சுவை இல்லை. விஷம் தான் இருக்கும். ஒரு விவரமறியா இளைஞனை கிண்டல் செய்வார்கள். அது கிண்டல் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. அதுதான் அந்த கேரக்டர். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் எடுத்த வெகுளித்தனமான கதாபாத்திரங்களைக் கூட கவிஞர் உதவியாக நின்று விளக்கியிருப்பார். உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் உள்ளதைச் சொல்வேன் நல்லதைச் செய்வேன் என்று பாடியிருப்பார்.


ஆனால், இந்தப் படத்தில் அந்த வேலையை கலைமணி என்ற வசனகர்த்தா செய்திருப்பார். அந்த மனிதனின் எழுத்து அபாரமானது. இந்தப் படத்திற்கு நிவாஸ் என்பவர் தான் கேமரா மேன். அவர் என்ன மாதிரியான கடினமான சூழலிலும் ரிசல்ட் கொடுப்பார். இந்தப் படம் எடுக்கும்போதெல்லாம் எங்களுக்கு கேமரா அத்தனை சிக்கல் செய்தது. ஆனால் நடிகர்கள் அனைவரும் நல்ல ரிஹர்சலோடு படப்பிடிப்பிற்கு வருவதால் அந்தக் குறையே தெரிந்திருக்காது என்று 16 வயதினிலே படத்தின் சிறப்புகளை விவரித்தார். 


பாரதிராஜா இயக்கத்தில் கமல் ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி மூவரும் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 16 வயதினிலே. இப்படத்தில் நடித்து பிரபலங்கள் அனைவரும் காலம் கடந்து இன்றும் ரசிகர்கள் மனதில், அந்த கதாபாத்திரமாக இடம்பிடித்துள்ளார்கள். கமல்ஹாசன் என்றால் சப்பாணி, ரஜினிகாந்த் என்றால் பரட்டை, ஸ்ரீதேவி என்றால் மயில் என இவர்களின் கதாபாத்திரம் இன்றும் அழியா இடத்தை பிடித்துள்ளது.