தமிழ்நாடு அரசின் காலை உணவுத்திட்டம் மாணவர்களிடையே ஏற்படுத்தியுள்ள உளவியல் மாற்றம், கற்கும் திறன் மேம்பாடு காரணமாக, அந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.


நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் மதிய சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காமராஜரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த மதிய உணவு திட்டம், அடுத்தடுத்து வந்த முதலமைச்சர்களின் நடவடிக்கைகளால் சத்துணவு திட்டமாக உருவெடுத்துள்ளது. அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக மாணவர்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்கும் நோக்கில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு:

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், இடைநிற்றலைத் தவிர்க்கவும் "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" எனும் பெயரில் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வேலை நாட்களில் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறிப்பிட்ட சில பள்ளிகளில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம், 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்திற்கான நிதியானது அரசுக்கு ஆகும் கூடுதல் செலவு இல்லை எனவும், மாணவர்கள் மீதான அரசின் முதலீடு என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

உளவியல் மாற்றம்:

ஒருவேளை உணவுக்குக் கூட வழியில்லாத குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள், பள்ளி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு கூலி தொழிலுக்கு செல்லும் சூழலை, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாற்றியுள்ளது. பள்ளிக்கு சென்றால் தங்களது பிள்ளைகளுக்கு இரண்டு வேலை உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கை பெற்றோரிடையே ஏற்பட்டுள்ளது. வெளியே சென்று இளம் வயதிலேயே கடும் வெயிலில் உழைப்பதை காட்டிலும், பள்ளிக்கு சென்றால் கல்வி பயில்வதுடன் சத்தான உணவும் கிடைக்கும் என பிள்ளைகளுக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு செல்வது தொடர்பான இந்த கூடுதல் நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்திய பெருமை, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தையே சேரும்.

கற்றல் திறன் அதிகரிப்பு:

பிள்ளைகளுக்கான உணவு பள்ளிகளிலேயே கிடைப்பதால், அவர்களை இளம் வயதிலேயே வேலைக்கு அனுப்பும் முயற்சியை பெற்றோர் கைவிட தொடங்கியுள்ளனர். இதனால், குழந்தை தொழிலாளர்கள் முறையும் குறைந்து வருகிறது. அதோடு, மாணவர்களின் இடைநிற்றலும் வெகுவாக குறைந்து, தினசரி பள்ளிக்கு வருவதால், பாடங்களை தவறாமல் கவனிக்கின்றனர். இதன் மூலம், இளம் தலைமுறையின் கற்றல் திறன் அதிகரிக்கிறது. இது எதிர்காலத்தில் தமிழகத்தின் அறிவுசார் வளர்ச்சியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்:

அண்மையில் சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், முதலமைச்சரின் முகவரி' திட்டத்தில் உள்ள சிஎம் ஹெல்ப் லைன் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்பவர்கள், பெரும்பாலும் தங்களது தேவைகளை, கோரிக்கைகளை, புகார்களை பதிவு செய்வதற்காகத்தான் பேசுவார்கள். ஆனால், சில வாரங்களுக்கு முன்னால் கோவையைச் சேர்ந்த தீபாராணி என்பவர்  தொடர்பு கொண்டபோது, 'உங்களுடைய புகார் என்னம்மா?' என்று கேட்டதும், 'புகார் சொல்வதற்காக நான் போன் செய்யவில்லை, முதலமைச்சரின் தொலைபேசி எண் என்னிடம் இல்லை. அவருக்கு நன்றி சொல்வதற்காக போன் செய்தேன்' என்று கூறினார். மேலும், நான் காய்கறி வியாபாரம் செய்கிறேன். அதனால் என் பிள்ளைக்கு காலையில சாப்பாடு கொடுக்க முடியாது. என் மகன் ஐந்தாவது படிக்கிறான். இப்போது, காலை உணவுத் திட்டத்தின் மூலமாக அவனுக்கு தினமும் காலை உணவு கிடைத்து விடுகிறது, அது தரமானதாக இருக்கிறது. அதனால முதலமைச்சருக்கு நன்றி சொல்லணும்" என்று அந்தத் தாய் நெகிழ்ச்சியோடு கூறியதுதான் எனக்குக் கிடைத்த பாராட்டு என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி:

தொடர்ந்து, “காலைச் சிற்றுண்டி சாப்பிடும் குழந்தைகள் மற்றும் கட்டணமில்லாப் பேருந்து பயணம் செய்யும் மகளிரின் முகங்களில் நித்தமும் காலையில் உதயசூரியன் உதிக்கிறது அல்லவா இதுதான் இந்த ஆட்சியினுடைய மாபெரும் சாதனை. பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, கல்லூரியில் படிக்கும் இளையோர்களை மட்டுமின்றி,  படிக்க வராமல் இடையில் நின்று விடக்கூடியவர்களையும் பள்ளி, கல்லூரிகளுக்குள் அழைத்து வருகிறோம். 2023 – 2024 ஆம் நிதியாண்டில் இருந்து காலை உணவு திட்டம் தமிழக முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்”, என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.