செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர் பகுதி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பாபு (31).  இவர் சென்னையில் உள்ள தனியார்  நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது செல்போனில் உள்ள செயலிகளை பயன்படுத்தி ஆன்லைன் பேமெண்ட் வசதி மூலம் அவ்வப்போது வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி வந்துள்ளார்.



 

இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி அவரது செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தியில் ஒரு லிங்க் வந்துள்ளது. அந்த லிங்க்கை பாபு தொட்டவுடன் அவருக்கு மற்றொரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 4 லட்டத்து 11ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு, சென்று தனது கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக கூறி புகார் தெரிவித்தார். மேலும்  தனது வங்கி கணக்கை முடக்க கூறினார்.



பின்னர் கடந்த 24ஆம் தேதி ஆன்லைன் மூலம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளித்தார். அந்த புகார் தென் சென்னை இணை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. சைபர் கிரைம் போலீசார் பாதிக்கப்பட்ட பாபுவை அழைத்து பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தினர்.


 

இதனைத் தொடர்ந்து பாபு நேற்று முன்தினம் இரவு பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கை சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றி மோசடி கும்பலை தேடி வருகின்றனர். மேலும் பாபு அளித்த குறுஞ்செய்தியில் லிங்க் உள்ளிட்டவற்றை வைத்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாபு வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம் எந்த வங்கிக் கணக்கிற்கு சென்றது என்பது குறித்து, வங்கி அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரிடம் இருந்தே 4 லட்ச ரூபாய் நூதன முறையில் திருடப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 

செல்போன்கள் எந்தளவிற்கு அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வரத்துவங்கியதோ, அப்போதிருந்தே தனிநபர் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதுபோன்ற திருடர்களிடம் இருந்து நம்முடைய தனிப்பட்ட தரவுகளையும் பணத்தை பாதுகாக்க வேண்டும் என்றால், அனைத்திலும் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பதே சைபர் பிரிவு வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. குறிப்பாக முன்பின் தெரியாத எண்ணில் இருந்து வரும் லிங்க் உள்ளிட்டவற்றை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்யக்கூடாது. வங்கி கணக்கு, ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்ட விவரங்களை யார் கேட்டாலும் கொடுக்க கூடாது என அரசும் காவல்துறையும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.