தஞ்சாவூர்: திருமண மண்டபம் புக் செய்தவரிடம் இருந்து நூதன முறையில் பணம் மோசடி செய்தவரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவையாறு அருகே கல்யாணபுரம் பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் தனது மகளுக்காக திருமண மண்டபம் புக் செய்திருந்தார். இந்நிலையில் அந்த முதியவரின் செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் உங்கள் மகள் திருமணத்திற்காக சமையல் காண்ட்ராக்ட்டை சேர்ந்தவர் பேசுகிறேன். எனது பெரியப்பாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளேன். அவசரமாக பணம் தேவைப்படுகிறது. ரூ.5 ஆயிரம் அனுப்பி வையுங்கள்.
இதை நம்பிய அந்த முதியவரும் சமையல் பணிக்காக பேசிய தொகையில் பின்னர் குறைத்து கொள்ளலாம் என்று அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் மீண்டும் அந்த முதியவரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட அந்த மர்மநபர் பெரியப்பாவிற்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். மேலும் ரூ.6 ஆயிரம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அந்த தொகையையும் அந்த நபர் கூறிய கணக்கிற்கு முதியவர் அனுப்பி உள்ளார். திருமண நாளின் போதுதான் அந்த முதியவருக்கு தான் புக் செய்த சமையல்காரர் பேசவில்லை, வேறு யாரோ பேசி தன்னை ஏமாற்றி உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அந்த முதியவர் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சைபர் க்ரைம் ஏடிஜிபி சந்தோஷ் குமார், எஸ்.பி., தேவராணி மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் ஆகியோர் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி முத்தமிழ்ச்செல்வன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் (பொ) ராமதாஸ், சப்-இனஸ்பெக்டர்கள் ரோஸ்லின் அந்தோணியம்மாள், கார்த்திக் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த முதியவர் பணம் அனுப்பிய வங்கி கணக்கை வைத்து விசாரித்தபோது அது மணத்திடல் பகுதியில் உள்ள ஆன்லைன் சேவை மையம் என்று தெரிய வந்துள்ளது. அங்கு மேற்கொண்ட விசாரணையில் அந்த பணத்தை மஹாபுரம் பகுதியில் உள்ள ஒரு ஆன்லைன் சேவை மையத்திற்கு மாற்றி விட்டதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் மணப்புரம் ஆன்லைன் சேவை மையத்தில் இருந்து நேரடியாக ஒரு தொகையும் மற்றொரு தொகை திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு ஆன்லைன் சேவை மையத்திற்கு மாற்றி அங்கிருந்து பணமாக பெற்றதும் தெரியவந்தது.
அங்கு கூறப்பட்ட தகவல்களின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நூதன முறையில் பணம் மோசடி செய்தது தஞ்சாவூர் மேல அலங்கம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (47) என்பது தெரிய வந்தது. இதையடுத்து சைபர் க்ரைம் போலீசார் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உட்பட பல மாவட்டங்களில் இவ்வாறு லட்சக்கணக்கில் நூதன முறையில் செந்தில்குமார் பண மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து உரியவர்கள் புகார் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
மேலும் சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், இதுபோன்று செல்போன்களில் வரும் அழைப்புகளை நம்பி பணம் அனுப்பவதை தவிர்க்க வேண்டும். நமக்கு தெரியாதவர்களிடம் இருந்து அழைப்பு வந்தால் அதை நிராகரிக்க வேண்டும். எனவே மக்கள் இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியமாகும் என்று தெரிவித்தனர்.