2022- 2023ஆம் ஆண்டிற்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கக் கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் விளிம்புநிலை மாணவர்களின் மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகளின் கல்வித் துறை சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. சில உதவித் தொகைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு, தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கு தகுதி வாய்ந்த, கல்லூரியில் படிக்கும் ஆதி திராவிடர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இன மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசுச் செயலாளர் கூறி உள்ளதாவது:
’’ஆதிதிராவிடர் நலத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கான இணையதளம் 2022- 2023ஆம் ஆண்டிற்கான மாணாக்கர்களின் விண்ணப்பங்களைப் பெற கடந்த 30.01.2023 முதல் திறக்கப்பட்டு 4.10 லட்சம் மாணாக்கர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு 31.05.2023 அன்று கல்வி உதவித் தொகை இணையதளம் முடிவுற்றது.
ஜூன் 30 வரை நீட்டிப்பு
எனினும், 2022-2023 ஆம் கல்வியாண்டில் பயின்று கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க தவறிய / விடுபட்ட மாணாக்கர்களிடம் இருந்தும், கல்வி நிறுவனங்களிடம் இருந்தும் பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், தற்போது இந்த இணையதளம் மீண்டும் திறக்கப்பட்டு 30.06.2023 வரை கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு கல்வி உதவித் தொகை இணையத்தில் விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் இருப்பின் இந்த இறுதி வாய்ப்பினை பயன்படுத்தி மேற்குறித்த காலக் கெடுவிற்குள் கல்வி உதவித் தொகை பெற இணையத்தில் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இந்தத் திட்ட விதிமுறைகளின்படி, இந்த கல்வியாண்டு முதல், முதன்முறையாக ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண், இணையத்தில் பெறப்பட்ட சாதிசான்று, வருமானச்சான்று, ஆதாருடன் இணைக்கப்பட்ட சேமிப்புக் கணக்கு எண் ஆகிய அனைத்து ஆவணங்களையும் இணையவழியில் சரிபார்க்கப்பட்டு, மாணாக்கர்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு கல்வி உதவித் தொகை சென்றடையும் வகையில் இணையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வீடியோ வெளியீடு
இணையப் பக்கத்தில் கல்வி உதவித் தொகை பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள காணொளி வீடியோ பார்த்து உரிய ஆவணங்களுடன் கல்வி உதவித் தொகைக்கு தகுதியுள்ள மாணாக்கர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’.
இவ்வாறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
எப்படி விண்ணப்பிப்பது என்ற வீடியோவைக் காண: https://www.youtube.com/watch?v=MQbisW_VWZA என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
கூடுதல் விவரங்களுக்கு: 1800-599-7638 (திங்கள் முதல் சனி வரை, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அழைக்கலாம்)
அரசின் இணையதளம்: https://tnadtwscholarship.tn.gov.in/