புதுச்சேரியை சேர்ந்த பொறியாளர் சையது சலாம் என்பவர் டெலிகிராமில் முதலீடு செய்து 38 லட்ச ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.


புதுச்சேரி பிருந்தாவனம் பகுதியை சேர்ந்தவர்  சையது சலாம். இவர்  வெளிநாட்டில் பொறியாளராக பணிபுரிந்து இருக்கிறார். கடந்த மூன்று மாதங்களாக புதுச்சேரியில் தங்கி இருக்கும் பொழுது இணைய வழி மோசடிக்காரர்கள் அவரை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு நாங்கள் சொல்கின்ற நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்தால் அன்றைய தினமே உங்களுக்கு 30 சதவீத இலாபம் கொடுப்போம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி கடந்த மாதம் 17ஆம் தேதி முதலில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்கிறார். முதலீடு செய்தவுடன் அவர்கள் சில youtube லிங்குகளை அனுப்பி அதில் அவரை சப்ஸ்கிரைப் செய்ய சொல்கிறார்கள். அவர் செய்து முடித்தவுடன் 300 ரூபாய் சேர்த்து 1300 ரூபாய் அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்தினர்.


முதலீடு :


அன்றைய தினமே மீண்டும் 6 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்கிறார். அவர்கள் சொன்ன டாஸ்கை முடித்தவுடன் 1800 ரூபாய் சேர்த்து 7800 ரூபாய் அவர் வங்கிக்கு வருகிறது. பிறகு நீங்கள் எங்களுடைய பிரிமியம் கஸ்டமர் ஆகி விட்டதால் உங்களுடைய வங்கி கணக்கு இனி உங்கள் கம்ப்யூட்டரிலேயே தெரியும் பணம் நேரடியாக உங்களுக்கு வராது என்று கூறியுள்ளனர். இதனை நம்பி கடந்த 15 நாட்களில் மட்டும் 38 லட்ச ரூபாயை இணையவழி மோசடிக்காரர்கள் சொன்ன பல்வேறு வங்கி கணக்கில் செலுத்திய பிறகு அவருடைய வங்கிக் கணக்கில் 52 லட்ச ரூபாய் பணம் இருப்பதாக காட்டியது. MBBZ.CC என்ற இணையதளத்திலும் மேற்படி புகார்தாரரை அவர்கள் முதலீடு செய்ய சொல்லி இருக்கின்றனர்.


வங்கி கணக்கில் பணம் திருட்டு :


பணத்தை எடுக்க முயன்ற போது அவருடைய வங்கி கணக்கில் பணம் இல்லை என்பதை கண்டு அதிர்ந்த சையதுசலாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். மேலும் மோசடிக்காரர்களையும் சையதுசலாமினால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரை தொடர்புகொண்ட அனைத்து டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டுகளும் க்ளோஸ் செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனைத்தொடர்ந்து, இணைய வழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆய்வாளர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


இணையவழி காவல்துறை மீண்டும் மீண்டும் எச்சரிக்கை:


பொது மக்களுக்கு இணைய வழி காவல்துறை மீண்டும் மீண்டும் எச்சரிக்கை செய்வது என்னவென்றால் இணைய வழியில் டெலிகிராம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் மற்ற இணையதளங்களில்  இருந்து வருகின்ற அதிக லாப முதலீட்டு அழைப்புகளை ஒருபொழுதும் நம்பாதீர்கள். அது முழுவதும் இணைய வழி மோசடிக்காரர்களின் கைவரிசையாகும். சமூக வலைதளங்களில் எந்த ஒரு முதலீடும் செய்யாதீர்கள். அவர்கள் சொல்கின்ற எந்த ஒரு ஆசை வார்த்தையும் நம்பாதீர்கள். நூற்றுக்கு நூறு சதவீதம் இணைய வழி மோசடிக்காரர்கள் மட்டுமே உங்களை தொடர்பு கொள்கிறார்கள். ஆகவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இது போன்ற இணைய வழி மோசடிக்காரர்களிடம் இழக்க வேண்டாம் என இணையவழி காவல்துறை உங்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டு எச்சரிக்கை செய்கிறது.