பிரதமர் மோடி தலைமையிலான இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தின் முடிவில், அதிமுகவை சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பாஜக தீவிர ஆலோசனை:


இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடி இரண்டு தினங்களுக்கு முன்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதில், 5 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து மிக தீவிரமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  தேர்தலை கருத்தில்கொண்டு  மத்திய அமைச்சரவை மற்றும் தேசிய அளவில் கட்சியில் சில மாற்றங்களை செய்ய முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 


அமைச்சரவையில் இன்று மாற்றம்?


இந்த நிலையில் தான், பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அதன் முடிவில் மத்திய அமைச்சரவையில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களை சேர்ந்த பாஜக எம்.பிக்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என எதிர்பார்கப்படுகிறது. அதிலும், எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களை சேர்ந்த, பாஜகவை சேர்ந்த எம்.பிக்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடமளிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


மத்திய அமைச்சரவையில் அதிமுக?


யாரும் எதிர்பாராத திருப்பமாக அதிமுகவை சேர்ந்த எம்.பி. ஒருவருக்கும் மத்திய அமைச்சரவையில் இடமளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக சார்பில் இருந்து மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரே நபர் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் நவீந்திரநாத் தான். ஆனால் , அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. அதேநேரம், அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள யாருக்கேனும் மத்திய இணை அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அதிமுகவை அமைதிப்படுத்த முயற்சி?  


நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என கூறப்பட்டாலும், எடப்பாடி பழனிசாமிக்கும் - பாஜக மாநில தலைவரான அண்ணாமலைக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. ஜெயலலிதாவை ஊழல்வாதி என அண்ணாமலை கூறியது அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்த, அக்கட்சியினர் கடும் எதிர்வினையாற்றி வந்தனர். செந்தில் பாலாஜி கைதால் அந்த பிரச்னை சற்றே தணிந்தாலும், அதிமுக - பாஜக இடையேயான பிரச்னை இன்னும் நீடித்து வருகிறது. இதனால், அதிமுக தலைமையை சமாதானப்படுத்தும் முயற்சியாக, இன்றைய அமைச்சரவை மாற்றத்தின் போது அக்கட்சிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.