மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், தேசிய நிதித் தகவல் பதிவேடு, டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா, திவால் திருத்தச் சட்டம், டெல்லி அவசரச் சட்டம் உள்ளிட்டவை வரும் நாடாளுமன்ற அமர்வில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நாளை நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க இருப்பதை முன்னிட்டு இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எம்.பி ஓ.பி. ரவீந்திரநாத் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த டிவிட்டர் பதிவில், “நாளை (20.07.2023) புதுடெல்லியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று (19.07.2023) மதியம் 03.00 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற இருக்கும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் மற்றும் மசோதாக்கள் குறித்து ஆலோசிப்பதற்காக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தின் சார்பாக அழைப்பு விடுத்ததின் பேரில் பாராளுமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு அ.இ.அ.தி.மு.க சார்பில் கழக மக்களவை தலைவராக நான்கலந்து கொள்ள உள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு இருப்பதால் ஓபிஎஸ் மற்றும் ஓ.பி. ரவீந்திரநாத் அதிமுகவிலிருந்து நிக்கப்பட்டுள்ளனர். மேலும், நீதிமன்ற தீர்ப்பின் படி இவரது நாடாளுமன்ற உறுப்பினர் தேர்வு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021ஆம் ஆண்டு மழைக்கால கூட்டத்தொடர், பெகாசஸ் விவகாரத்தாலும் 2022ஆம் ஆண்டு கூட்டத்தொடர் விலைவாசி உயர்வு பிரச்சனையாலும் பெரும் பாதிப்படைந்தது. இந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் அதானி விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில், நாடாளுமன்ற கூட்டு விசாரணை நடத்த வேண்டும் எதிர்க்கட்சிகள் முதல் பாதியை முடக்கியது.
பிரிட்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுப்பட்டனர். இதனால், பட்ஜெட் கூட்டதொடரும் பெரும் பாதிப்பை சந்தித்தது. பல முக்கியமான சட்டங்கள் விவாதிக்கப்படாமல் நிறைவேற்றப்பட்டன.