ரஜினியுடன் படம் பண்ணுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சூசகமாக தெரிவித்துள்ளார். 


வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்த லோகேஷ் கனகராஜ் சினிமா மீதான காதலால் திரைத்துறைக்குள் நுழைந்தார். மாநகரம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அவர், தொடர்ந்து கார்த்தியை வைத்து ‘கைதி’ படத்தை இயக்கினார்.  அடுத்ததாக விஜய் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ‘மாஸ்டர்’ , தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கியிருந்தார். தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல லோகேஷ் இதுவரை இயக்கிய படங்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது. 


விஜய்யுடன் மீண்டும் கூட்டணி 


 இதனிடையே  இயக்குநர் லோகேஷ் கனகராஜ்  நடிகர் விஜய்யுடன் 2வது முறையாக ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளார். லியோ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடிக்க, சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கெளதம் மேனம், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராஜ் காஷ்யப்  என இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர். 


அனிருத் இசையமைக்கும் லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்ற நிலையில் கடந்த வாரம் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். 


அப்டேட்டுக்காக காத்திருக்கும்  ரசிகர்கள் 


இதற்கிடையில் ரிலீசுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது.  மறுநாள் 2வது லுக் போஸ்டர் வெளியானது. அன்று மாலை  முதல் பாடலாக ‘நா ரெடி’ வெளியானது.  விஜய் பாடிய இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 


இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினியின் 171வது படத்தை இயக்கப்போவதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது. இதனை சினிமா வட்டாரத்தில் ஒரு சிலர் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் ரஜினி மற்றும் லோகேஷ் தரப்பு இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இதனிடையே கோவையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக பங்கேற்ற லோகேஷ் கனகராஜ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவரிடம் ரஜினி படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆம் என சொல்லாமல் தலையாட்டிய லோகேஷ் கனகராஜ், “அதற்கான அறிவிப்பு தயாரிப்பு தரப்பிடமிருந்து வெளியாகும்” என தெரிவித்துள்ளார். இதனை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். மேலும் வாய்ப்பு கிடைத்தால் அஜித்தை வைத்தும் படம் பண்ணுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.