கடலூர், பண்ருட்டி அருகே பெரிய எலந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்த மணிபாலன் என்பவரின் மகன் ஆதிசங்கர் (24) இவர் வெல்டிங் தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ரசபுத்திரபாளையத்தை சேர்ந்த கலையரசி (21) என்பவருக்கும் கடந்த 11.9.2013 அன்று திருமணம் நடந்தது உள்ளது. திருமணமாகி 2 மாதங்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்த ஆதிசங்கர், அதன் பிறகு திடீரென மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து துன்புறுத்தி வந்து உள்ளார். இதற்கு இடையில் கர்ப்பமான அவருக்கு புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. முதலில் ஒரு முறை அந்த குழந்தையை பார்க்க சென்ற ஆதிசங்கர், அதன் பிறகு மனைவி, குழந்தையை பார்க்க மீண்டும் செல்லவில்லை.
இதனால் ஆதிசங்கரின் மனைவி தனது தாய் வீட்டில் இருந்து வந்து உள்ளார். இந்த நிலையில் மாமியார் வீட்டுக்கு சென்ற ஆதிசங்கர் இது பற்றி கேட்ட போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர் கலையரசியை தாக்கி உள்ளார். பின்னர் இது பற்றி அவர் விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். இதையடுத்து ஆதிசங்கர், கலையரசியை அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். கடந்த 17.10.2015 அன்று ஆதிசங்கர், கலையரசியிடம் ரூ.35 ஆயிரத்தை கொடுத்து, சிலிண்டர், அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் ரூ.2500 கொடுத்து மின்சாரம் அடுப்பு வாங்கி ஏமாற்றப்பட்டு உள்ளார். இதை அறிந்த ஆதிசங்கர், அவரிடம் கேட்ட போது, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர் கலையரசியை தாக்கி, துன்புறுத்தி உள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த கலையரசி வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி பண்ருட்டி காவல் நிலையத்தில் அவரது தாய் தட்சாயினி புகார் செய்தார். அதன்பேரில் துன்புறுத்தி, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து ஆதிசங்கரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் ஆதிசங்கர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வளர்மதி ஆஜராகி வாதாடினார்.