சாதி மோதலை தூண்டும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஜமீன் கூடலூர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்த ம.சுகுமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் பிறப்பித்துள்ள அளிக்கையில், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம், ஜமீன் கூடலூர் ஊராட்சி செயலாளராகவும், நீலந்தாங்கல் ஊராட்சியில் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தவர் ம.சுகுமார். இவர், ஊராட்சி செயலாளர் பணியை சரிவர செய்ய வில்லை. நீலந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவருக்கு எதிராகவும், ஊராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பும் அளிக்காமலும் இருந்து வந்துள்ளார். இதனால் நிர்வாக நலன் கருதியும் திருவண்ணாமலை ஒன்றியம் இசுக்கழிகாட்டேரி ஊராட்சி செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர், அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு பெரியகல்லப்பாடி ஊராட்சிக்கு பணியிட மாறுதல் அளித்து உத்திரவிடப்பட்டது. மேலும், ஜமீன் கூடலூர் மற்றும் நீலங்தாங்கல் ஊராட்சி செயலாளர் பொறுப்பில் இருந்து கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். ஆனால், புதிய இடத்தில் பணியில் சேரவில்லை. பணியிட மாறுதல் உத்தரவை ம.சுகுமார் உதாசினப்படுத்தி உள்ளார். 



மேலும், நீலந்தாங்கல் ஊராட்சிமன்ற தலைவர் வீட்டுக்கு கடந்த ஜனவரி 10 ஆம் தேதி அத்துமீறி சென்று, அவரை சாதி ரீதியாக இழிவுப்படுத்தி தாக்கியதாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி செயலாளராக அரசுப்பணியில் இருந்து கொண்டு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு, ஊராட்சி மன்ற தலைவரை தாக்கி உள்ளார் என்றும். மேலும், அவரை பணி செய்ய விடாமல் தடுத்து, சாதி ரீதியாக மோதலை தூண்டும் வகையில் செயல்பட்டு வந்துள்ளார். ஊராட்சி நிர்வாகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர் குலையாமல் இருக்கவும், கிராம ஊராட்சியில் சமுதாய நல்லிணக்கத்தை பராமரிக்க ஊராட்சி செயலாளர் ம.சுகுமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்படுகிறது' என தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷின் பணியிடை நீக்க உத்தவை, ஊராட்சி செயலாளர் ம.சுகுமாரிடம் கீழ் பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாக நேற்று முன்தினம் வழங்கப்பட்டுள்ளது.



இதற்கிடையில், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவராக உள்ள சுகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ரூ.17.55 கோடி மதிப்பில் நடைபெற்றுள்ள பணியில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு ஒன்றியக் குழு கவுன்சிலராக உள்ள தனது மனைவி அனுராதா புகார் கொடுத்ததால், தான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக' தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் சங்கம் சார்பில் நேற்று நடத்தப்பட்ட கூட்டத்தில், சுகுமாரின் பணியிடை நீக்கத்தை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது' என முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.