கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மாளிகை மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் திலீப்குமார் (வயது 59). இவர் வல்லம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு இயற்கை உபாதை கழிக்க சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தனர்.

 

மீண்டும் மறுநாள் அவரை தேடியபோது அதே பகுதியில் கரும்புத் தோட்டத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்து இருந்த 2 பவுன் தங்க நகை காணவில்லை. கொலை செய்யப்பட்ட அப்பகுதியில் தடயங்களை மறைக்க மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. தகவல் அறிந்த பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். பின்னர் பண்ருட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

 



 

இதுகுறித்து உயிரிழந்த திலீப்குமாரின் மகன் வினோத்குமார் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்தனர். பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா தலைமையில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் உதவி ஆய்வாளர்கள் தனிப்படைகள் அமைத்து கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். குறிப்பாக இக்கொலைக்கான காரணம் குறித்து  என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்தனர்.

 

இந்த நிலையில் அப்பகுதியில் பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவியில் உள்ள பதிவுகளை எடுத்து ஆராய்ந்த போது, சந்தேகபடியான ஒருவர் சம்பவ நாள் அன்று அடிக்கடி நடந்து செல்வது தெரிந்தது. அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அதே ஊரை சேர்ந்த பாலு மகன் அரவிந்த் (22) மெக்கானிக் என்பதும் திலீப்குமார் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்க நகைக்காக கொலை செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டார்.

 

இதனையடுத்து போலீசார் அரவிந்தை கைது செய்து இரண்டு பவுன் தங்க நகையை மீட்டனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அரவிந்துக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதால், அதற்கு உண்டான செலவுக்காக பல்வேறு இடங்களில் பணம் கடன் கேட்டதாகவும் யாரும் கொடுக்கவில்லை என்றும், இந்த சூழ்நிலையில் ரேஷன் கடை ஊழியர் திலீப் குமார் அதிகளவில் நகை கழுத்தில் அணிந்திருப்பது நினைவுக்கு வந்தது. தொடர்ந்து அவரை நோட்டமிட்டு காத்திருந்து அவர் வந்த போது தான் வைத்திருந்த கத்தியால் அவர் கழுத்தில் குத்தினேன், சரியாக குத்த முடியவில்லை. பிறகு அருகில் இருந்த ஒரு மரக்குச்சி எடுத்து கழுத்தில் சரமாரியாக குத்திவிட்டு பிறகு கையால் கழுத்தை அழுத்தி சாகடித்தேன்.

 

பின்னர் வீட்டுக்குச் சென்று மிளகாய் பொடியை எடுத்து வந்து அவர் மீது தூவி விட்டு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு தனது கைகளை கழுவி விட்டு வீட்டுக்கு சென்றிருந்தேன். பின்னர்  சந்தேகப்படும்படியாக இருந்த அரவிந்தன் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் விசாரணை செய்தனர். விசாரணைக்கு பின்னர் சிசிடிவி கேமரா பதிவை வைத்து தன்னை கண்டுபிடித்து விடுவீர்கள் என நினைத்து மக்களோடு மக்களாக இருந்து கொண்டு சந்தேகம் வராமல் இருக்க திலிப்குமார் மகன் வினோத்குமார் உடன் இருந்து கொண்டு என்ன நடக்கிறது என்று கண்காணித்துக் கொண்டிருந்ததாகவும்,மேலும் காவல் நிலையத்திற்கு உயிரிழந்த திலீப் குமாரின் மகன் வினோத்குமார் உடன் சேர்ந்து புகார் கொடுக்க செல்வது, குற்றவாளியை உடனே கைது செய்யக்கோரி காவல்துறையினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது போன்ற பல்வேறு நாடகங்கள் நடத்திய நிலையில் காவல்துறையினரின் கிடுக்கு பிடி விசாரணையில் தற்பொழுது அரவிந்த் கண்டுபிடிக்கப்பட்டார். இதனை அடுத்து பண்ருட்டி நீதிமன்றத்தில் அரவிந்தை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.