கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிக்குப்பம் ராஜாராம் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கமலேஸ்வரி, கணவர் சுரேஷ்குமார் இறந்த நிலையில் கமலேஸ்வரி அவரது மகன் சுகந்த குமார், பேரன் இஷான் ஆகியோர் உடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். 


 

இந்த நிலையில் நேற்று காலை கமலேஸ்வரி வீட்டிலிருந்து புகை மற்றும் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் நெல்லிக்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

 

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனித்தனி அறைகளில் அவர்கள் எரிந்து கிடந்தனர். மேலும் வீட்டில் ஆங்காங்கே ரத்தச் சிதறல்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் தடய அறிவியல் துறை நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

 

மேலும் கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நேரில் விசாரணையை தொடங்கினார். மேலும் டிஎஸ்பி பழனி தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கூடுதல் போலீஸ் உதவியுடன் சுகந்தகுமார் பணியாற்றி வரும் ஹைதராபாத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். 

 

மேலும் சம்பவம் நிகழ்ந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட செல்போன்களின் தகவல்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சுகந்த குமாரின் விவாகரத்து பெற்ற முதல் மனைவி, இரண்டாவது காதல் மனைவி ஆகியோரிடம் நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வீட்டின் அருகே சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அப்பகுதிக்கு புதியதாக வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

 

வெள்ளிக்கிழமை இரவு கொலை செய்து விட்டு தடயங்களை அழிக்க மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வந்து உடலில் துணிகளை போட்டு எரித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் கடலூரில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.