கடலூர் மாநகராட்சி கமிஷனரின் கையெழுத்தை போலியாக போட்டும், அரசு முத்திரைகளை பயன்படுத்தியும் மனை பிரிவுகள் அங்கீகாரம், வீடு கட்ட அங்கீகாரம் என பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் முதுநகர் பகுதியை இருசப்பன் தெருவில் வசிக்கும் ஒருவருக்கு போலி எண், போலி அரசாங்க முத்திரையிட்டு, மாநகராட்சி ஆணையாளரின் போலி கையொப்பமிட்டு திட்ட மற்றும் கட்டிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கடலூர் மாநகராட்சியில் கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி புகார் ஒன்று வந்தது.
அந்தப் புகாரின் அடிப்படையில் மாநகராட்சியில் உள்ள ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதில் போலியாக அரசாங்க முத்திரை மற்றும் அரசு அதிகாரிகளின் கையெழுத்தை போலியாக இட்டு, கட்டிட அனுமதி வரைபடம் தயார் செய்து வழங்கியிருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து கடலூர் மாநகராட்சி சார்பில் போலி கட்டிட அனுமதி வழங்கிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புது நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் கடலூர் ஆணைக்குப்பத்தை சேர்ந்த சேதுபாரதி என்பவர் போலியான அரசாங்க முத்திரை, கடலூர் மாநகராட்சி பகுதிகளில் வீடு கட்ட அனுமதி வழங்கியதுடன் கடலூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குனரின் போலியான கையொப்பம் போட்டு மனை பிரிவுகளுக்கும் ஒப்புதல் அளித்துள்ளதை உறுதி செய்து சேதுபாரதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த மோசடி விவகாரத்தில் மாநகராட்சி ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்ததை தொடர்ந்து சேது பாரதியை போலீஸ் காவில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.