கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு பயனாளர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக தமிழ்நாடு முழுவதும் இன்று மூன்றாம் கட்ட முகாம்கள் தொடங்குகின்றன. 


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை:


தேர்தலில் வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் வரும் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. அன்றைய தினமே தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பயனாளர்களுக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தகுதியான பயனாளர்களை திட்டத்தில் இணைப்பதற்கான பணிகள் அரசு சார்பில் வேகமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட முகாம் ஜுலை 24ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 14 தேதி வரை நடைபெற்றது. இந்த முகாம்களின் மூலம் மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் திட்டத்தில் இணைய 1.54 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர்.


கூடுதல் விதிவிலக்கு:


இதனிடையே,  மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் புதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.  இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.


மூன்றாம் கட்ட முகாம்:


இந்நிலையில்,  விதிவிலக்கு அளிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கனவே நடைபெற்ற முகாம்களின் போது பதிவு செய்ய தவறிய தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய ஏதுவாக,  இன்று தொடங்கி வரும் 30ம் தேதி வரை மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. ஏற்கனவே விண்ணப்பித்த நபர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என வலியுறுத்தப்பட்டுள்ளது.


வேண்டுகோள்:


மேற்படி முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின் சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது விண்ணப்பத்தாரர்கள் களஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தருமாறு தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, விண்ணப்பங்கள் பெறுதல், களஆய்வு மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நேற்று காணொளி வாயிலாக ஆய்வுக்கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.