விஷம் கலந்து கொடுத்து தொழில் அதிபரை கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி காதலனுடன் கைது செய்யப்பட்டார்.


ரத்தத்தில் கலந்த ரசாயனம்


மும்பை சாந்தாகுருஸ் மேற்கு பகுதியை சேர்ந்தவர் கமல்காந்த் ஷா (45). இவர் ஜவுளி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கவிதா (45). இவர்களுக்கு 20 வயது மகள், 17 வயது மகன் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் கமல்காந்த் ஷாவுக்கு தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டது. எனவே அவர் சிகிச்சைக்காக அந்தேரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் வலி குறையவில்லை. 
எனவே அவர் மேல் சிகிச்சைக்காக தென்மும்பையில் உள்ள பாம்பே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது நடந்த சோதனையில் ஆர்சனிக், தாலியம் போன்ற ரசாயனங்கள் தொழில் அதிபரின் ரத்தத்தில் கலந்து இருப்பது தெரியவந்தது. இந்தநிலையில் செப்டம்பர் 19ஆம் தேதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


நாடகமாடிய மனைவி


இந்த சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்தனர். அதே நேரத்தில் கமல்காந்த் ஷாவின் மரணத்தில் மர்மம் இருந்ததால் அது குறித்து குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினர். போலீசார் கமல்காந்த் ஷாவின் குடும்பத்தினர், மனைவி உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.


அப்போது அவரது மனைவி கவிதா தனக்கு ஒன்றும் தெரியாதது போல இருந்துள்ளார். இருப்பினும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. கமல்காந்த் ஷாவை அவரது மனைவி கவிதா, காதலன் ஹிதேஷ் ஜெயின் (45) என்பவருடன் சேர்ந்து விஷம் கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது.


கவிதாவின் காதலை கணவர் கமல்காந்த் ஷா கண்டித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் கணவரை கொலை செய்து அவரது சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டுள்ளார். எனவே ஒரு நாள்  ஹிதேஷ் ஜெயின் உதவியுடன் ரசாயனத்தை வாங்கி உணவில் கலந்து கணவருக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதை சாப்பிட்ட கமல்காந்த் ஷா, ரத்தத்தில் ரசாயனம் கலந்து பரிதாபமாக உயிரிழந்தாக போலீசார் தெரிவித்தனர்.


மாமியார் கொலை?


இதையடுத்து விபத்து வழக்கை, கொலை வழக்காக மாற்றிய போலீசார் கவிதா, காதலன் ஹிதேஷ் ஜெயினை கைது செய்து விசாரணை நடத்தினர்.  கடந்த ஜூலை மாதத்தில் கமல்காந்த் ஷாவின் தாய் சரளாதேவிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. சிசிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது பல உறுப்புகள் செயலிழந்ததால் அவர் உயிரிழந்தார். ஆனால் அவரது மரணத்தில் உண்மையை கண்டறிய முடியவில்லை. எனவே அவரையும் இதேபோல கவிதா கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 
காதலனுடன் சேர்ந்து கணவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து மனைவி கொலை செய்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் டிசம்பர் 8-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.




மேலும் படிக்க


TN Rain Alert: மக்களே உஷார்.. அடுத்த 3 மணிநேரத்தில் 22 மாவட்டங்களில் மழை.. எந்தெந்த மாவட்டம் தெரியுமா? வானிலை அப்டேட் இதோ..