நவம்பர் மாதத்தில் கருங்கடல் உணவு திட்டத்தில் ரஷியா மீண்டும் இணைந்ததால் உலகளாவிய கோதுமை விலை 2.8 சதவிகிதம் குறைந்துள்ளது என ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
ரஷியா மற்றும் உக்ரைனில் இருந்து தானியம் ஏற்றுமதி செய்யப்படுவது நிலையாக அதிகரித்துள்ளதால் சர்வதேச தானிய விலை நவம்பர் மாதத்தில் குறைந்துள்ளது என ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் உணவு விலை குறியீடு கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் குறைவாக பதிவாகியுள்ளது. குறைந்தபோதிலும், இதுவரை இல்லாத உச்ச அளவிலேயே உணவின் விலை தொடர்கிறது.
ரோம் நாட்டில் தலைமை அலுவலகம் கொண்டு இயங்கி வரும் ஐநா உணவு மற்றும் வேளாண் அமைப்பு உணவு விலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "நவம்பர் மாதத்தில் கருங்கடல் உணவு திட்டத்தில் ரஷியா மீண்டும் இணைந்ததால் உலகளாவிய கோதுமை விலை 2.8 சதவிகிதம் குறைந்துள்ளது.
கோதுமை உள்ளிட்ட தானியங்களுக்கான துணைக் குறியீடும் 1.3 சதவீதம் குறைந்துள்ளது. முக்கிய உணவு விலைக் குறியீட்டில் துணைக் குறியீடு மிகப்பெரிய அங்கமாகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருங்கடல் துறைமுகங்கள், பொதுவாக கோதுமை மற்றும் பிற தானியங்களின் முக்கிய வர்த்தக மையங்களாக இருந்து வருகிறது. பிப்ரவரியில் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே மோதல் தொடங்கியதில் இருந்து இந்த துறைமுகங்கள் நம்பகத்தன்மையற்றதாக மாறியுள்ளது. இதனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் உணவின் விலை உச்சத்திற்கு சென்றது.
கருங்கடல் உணவு திட்டத்தில் இருந்து ரஷியா வெளியேறி தற்போது நவம்பரில் மீண்டும் இணைந்தது. இதற்கான ஒப்பந்தத்திற்கான விதிமுறைகள் 2023 வரை நீட்டிக்கப்பட்டது.
கருங்கடல் உணவு திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, "கருங்கடல் தானிய திட்டத்திற்கும் கோதுமை ஏற்றுமதி நிலையானதற்கும் தொடர்பு இருக்கிறது. அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஏற்படும் அதிக தேவையை சமப்படுத்த இது போதுமானது.
ஒட்டுமொத்த உணவு விலைக் குறியீடு அக்டோபரில் இருந்து மாறாமல் இருந்தது. இருப்பினும், இது ஒரு ஆண்டுக்கு முந்தைய அளவை விட 0.3 சதவீதம் அதிகமாகி உள்ளது. இது இதுவரை இல்லாத உச்சம்.
பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் உணவு குறியீட்டு புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு, உக்ரைன் மோதலால் ஏற்பட்ச சிரமத்திற்கு ஏற்ப சந்தை தன் தன்மையை மாற்றி கொண்டது. தாவர எண்ணெய்க்கான உலகளாவிய விலை 2.3 சதவிகிதம் உயர்ந்தன. வழக்கத்திற்கு மாறான அதிகரித்துள்ள கிராக்கியால் பாமாயில் மற்றும் சோயா எண்ணெயின் விலை உயர்ந்தது.
அதே நேரத்தில், சர்க்கரை விலை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு சரிந்தது. அதன் பிறகு 5.2 சதவிகிதம் அதிகரித்தன. நவம்பரில் பால் பொருட்களின் விலை 1.2 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால், முந்தைய ஆண்டை விட 9.2 சதவீதம் அதிகமாக இருந்தது" என குறிப்பிட்டுள்ளது. இறைச்சி விலை 0.9 சதவீதம் குறைந்தது.
23 உணவு வகைகளின் உலகளாவிய விலையை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுவதே உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் உணவு விலை குறியீடாகும்.