வீடுகளுக்கு வெளியில் இருக்கும் விலையுயர்ந்த செருப்பு மற்றும் ஷூக்களை திருடும் பெண்களின் கும்பலின் சேட்டை மும்பை புறநகர் பகுதிகளில் அதிகரித்து வருகிறது. 


அந்தேரியை சேர்ந்த ஒரு மராத்தான் வீரர் சமீபத்தில் ரூ. 50, 000 மதிப்புள்ள இரண்டு ஜோடி ரன்னிங் ஷூக்களை இழந்துள்ளார் என்பதுதான் இங்கு அதிர்ச்சியான சம்பவம். 


அந்தேரி கிழக்கில் உள்ள மஹாகாளி கேவ்ஸ் சாலையில் உள்ள பூனம் நகரில் உள்ள ஹார்மோனி சொசைட்டியில் வசிக்கும் 30 வயதான பாகுல் சூர்யகாந்த் ஷிண்டே, மாரத்தான் வீரராக இருந்து வருகிறார். இவர் தான் ஓடுவதற்காக சுமார் ரூ.50, 000 மதிப்புள்ள இரண்டு ஷுக்களை தனது வீட்டிற்கு வெளியே உள்ள படிக்கட்டில் வைத்துள்ளார். அதேபோல், ஓஎன்ஜிசி நிறுவனத்தில் தலைமை கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற தடகள வீரரின் தந்தை சூர்யகாந்த் ஷிண்டே தனது 15,000 ரூபாய் மதிப்புள்ள பிராண்டட் ஷுவை அங்கே வைத்திருந்தார். 


இந்தநிலையில், இந்த ஷூக்கள் அனைத்தும் சமீபத்தில் காணாமல் போயுள்ளது கண்டு இருவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, இவர்கள் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில் இரண்டு பெண்கள் திருடி சென்றதை கண்டுபிடித்துள்ளனர். 


இதுகுறித்து பேசிய பகுல் சூர்யகாந்த் ஷிண்டே, “நான் ஒரு சர்வதேச மாராத்தான் ஓட்டப்பந்தய வீரர் மற்றும் 16 வயதுக்குட்பட்ட கால்பந்து இந்திய அணிக்காக ஸ்வீடன் மற்றும் டென்மார்க் வரை சென்று விளையாடியுள்ளேன். சில மாதங்களுக்கு முன்பு, தலா ரூ.25, 000 மதிப்புள்ள இரண்டு ஜோடி ரன்னிங் ஷூக்களை வாங்கி இருந்தேன். இந்த ஷூக்களை எங்கள் வீட்டிற்கு வெளிடே படிக்கட்டில் வைத்திருந்தோம். 


கண்காணிப்பு கேமரா காட்சிகலை பார்த்தபோது, முகமூடி அணிந்த இரண்டு புடவை அணிந்த பெண்கள் ஷூக்களை எடுத்து சென்றனர். சாதாரண வேலை ஆட்களை போல் நடந்து வந்து எங்களது விலையுயர்ந்த ஷூக்களை திருடியுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களில் சிக்காமல் இருக்க குடையையும் பயன்படுத்தியுள்ளனர். 


சம்பவம் குறித்து நாங்கள் அந்தேரி போலீஸாருக்குத் தெரிவித்தபோது ஒரு பீட் மார்ஷல் கான்ஸ்டபிள் வந்தார். சிசிடிவி காட்சிகளை போலீஸாரிடம் பகிர்ந்து கொண்டோம். திருடப்பட்ட பொருட்கள் வெறும் காலணி என்பதால் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்யவில்லை. எம்ஐடிசி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் சதீஷ் கெய்க்வாட் கூறுகையில், "இது தொடர்பாக எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. அந்த நபர் தகவல் கொடுத்தால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்துவோம்.” என்று தெரிவித்தார். 


இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் காட்கோபர் கிழக்கில் உள்ள வல்லப் பாக் லேனில் உள்ள கமல் குஞ்ச் சொசைட்டி, 60 அடி சாலையில் உள்ள பசந்த் விஹார் சொசைட்டி ஆகியவற்றிலிருந்து பெண் கும்பல் ஷூக்களை திருடுவது கேமராவில் சிக்கியது. 15,000 மதிப்புள்ள இரண்டு ஜோடி ஷூக்களை பெண் கும்பல் திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.