Crime: கேராளவில் வரதட்சணை கொடுமையால் மருத்துவம் படித்து வந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
BMW கார், 150 சவரன் நகை:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெஞ்ஞாறமூடு பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ஷகானா. இவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் சர்ஜரி பிரிவில் முதுகலை மருத்துவம் படித்து வந்தார். மருத்துவர் ஷகானா தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வசித்து வந்தார். அவரது தந்தை வளைகுடாவில் பணிபுரிந்து வந்த நிலையில், அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதற்கிடையில், இளம்பெண் ஷகானா, அவருடன் முதுகலை மருத்துவம் படிக்கும் சீனியரான ரூவைஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் கொல்லம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்தவர்.
ஷகானா, ரூவைஸை காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ரூவைஸின் வீட்டிற்கு சென்று, ஷகானாவின் குடும்பத்தினர் திருமணம் பற்றி பேசினர். ஆனால், திருமணத்திற்கு மருத்துவர் ரூவைஸின் குடும்பத்தினர் வரதட்சணையாக 150 சவரன் நகை, 15 ஏக்கர் நிலம், பிஎம்டபிள்யூ கார் கேட்டதாக தெரிகிறது. இவ்வளவு தர முடியாது என்று டாக்டர் ஷகானாவின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதனால், கோபமடைந்த ரூவைஸின் குடும்பத்தினர் திருணமத்தை நிறுத்தியுள்ளனர். பெற்றோரின் வார்த்தைகளை மீறி ரூவைஸால் செயல்பட முடியவில்லை என்று கூறப்படுகிறது. வரதட்சணை காரணமாக திருமணம் தடைபடும் நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, மனதளவில் உடைந்துபோனார் ஷகானா. ரூவைஸ் அதன் பின்னர் ஷகானாவிடம் பேசினாரா? என்பது தெரியவில்லை.
தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்:
இந்நிலையில், இளம் மருத்துவர் ஷகானா கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த கடிதத்தில், "அனைவருக்கும் பணம் மட்டுமே தேவை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து மாநில சிறுபான்மை ஆணையமும் விசாரித்து வருகீறது. மாநில மகளிர் ஆணையத் தலைவர் பி.சதிதேவி, மருத்துவர் ஷகானாவின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். வரதட்சணை குறித்த புகார்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)