நெல்லை மாவட்டம் பிரான்சேரி அருகே மேலச்செவல் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்ற கிட்டுசாமி (வயது 55). இவர் அப்பகுதியில் உள்ள பழமையான நவநீதகிருஷ்ண சுவாமி திருக்கோவில் பராமரிப்பு பணி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கமாக கோவிலுக்கு சென்ற அவர் பணிகளை முடித்துவிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட வீட்டிற்கு சென்றார். பின்னர் மீண்டும் கோவிலுக்கு திரும்பி வந்த போது கோவில் வளாகத்திலேயே சரமாரியாக வெட்டப்பட்டு காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்து உள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடி வந்தனர்.
குறிப்பாக போலீசாரின் விசாரணையில், கிருஷ்ணன் கோவிலை சுத்தம் செய்யும் பணி செய்து வரும் நிலையில் அக்கோவிலில் மேலச்செவலை சேர்ந்த சில இளைஞர்கள் கோவில் காம்பவுண்டு சுவரில் அமர்ந்து மது அருந்தி வந்துள்ளனர். மேலும் அங்கு வரும் பொதுமக்களை அவதூறாக பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் இதனை கிருஷ்ணன் தட்டிக் கேட்டுள்ளார். இதனை மனதில் வைத்துக் கொண்டு முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இக்கொலையில் தொடர்புடைய கொம்பையா (19), செல்லக்குட்டி என்ற துரை (23), பால சந்துரு (23), பற்பநாதன்(19), அருண் இசக்கிபாண்டி (19), மாரியப்பன் (19) மற்றும் அய்யப்பன் (23) ஆகிய 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தவறை தட்டிக்கேட்ட நபரை பரிதாபமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.