நெல்லை மாநகர பகுதியான பாளையங்கோட்டை அடுத்து உள்ளது மகிழ்ச்சி நகர். இப்பகுதியில் வசித்து வருபவர் ராஜி. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராஜி குடும்பத்துடன் சேலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் மகிழ்ச்சி நகரில் உள்ள ராஜி வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த பொருட்கள் ஒவ்வொன்றாக திருடி உள்ளார்.
அவ்வாறு திருடி கொண்டிருந்த போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு ஏதோ சத்தம் கேட்டுள்ளது, பின்னர் பூட்டிய வீட்டினுள் கதவை திறந்து மர்ம நபர் உள்ளே புகுந்திருப்பதை அறிந்த நிலையில் சுற்றி வசிப்பவர்கள் ஒன்று கூடி வீட்டின் முன் திரண்டுள்ளனர். பொதுமக்கள் வீட்டின் முன் திரண்டிருப்பதை அறிந்த திருடன் சுதாரித்துக் கொண்டு கையில் கிடைத்த சில பொருட்களை மட்டும் பையில் அள்ளிக் கொண்டு சுவர் ஏறி குதித்து அங்கிருந்து தப்பி ஓடி உள்ளான். இதனை பார்த்த பொதுமக்கள் திருடனை துரத்தி சென்று பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அங்கிருந்து திருடன் தப்பிச் சென்ற நிலையில் இது குறித்து அப்பகுதி மக்கள் பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையன் கையில் ஒரு பையுடன் கிடைத்ததை சுருட்டி கொண்டு ஓட்டம் பிடிப்பது, அவனை சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என அனைவரும் துரத்தி செல்வதும் பதிவாகியிருந்தது. இதனை கைப்பற்றிய காவல்துறையினர் அதனடிப்படையில் கொள்ளையனை தேடி வருகின்றனர். இந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதோடு காவல்துறையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் நெல்லை மாநகர பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் மகிழ்ச்சி நகரில் கொள்ளை சம்பவத்தை பொதுமக்கள் கையும் களவுமாக கண்டுபிடித்ததோடு கொள்ளையனை துரத்தி சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்