நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த ராமையன்பட்டி வட்டக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் சங்கர்(35). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். 


இந்த நிலையில் தனது சொந்த ஊருக்கு சுபாஷ் சங்கர் வந்திருந்த நிலையில் தனது வீட்டிற்கு செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது வீட்டு வாசலின் அருகே சுபாஷ் சங்கரை வழிமறித்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த நிலையில் சுபாஷ் சங்கர் நிலை குலைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சங்கரை கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 


குறிப்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் முதற்கட்ட போலீஸ் விசாரணையில், ஏற்கனவே சுபாஷ் சங்கருக்கும், அங்கே உள்ளவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது கண்டறியப்பட்டதை தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை துரித படுத்தி உள்ளனர். குறிப்பாக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் சுபாஷ் சங்கர் மற்றும் ராமையன்பட்டி பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு அரிவாள் வெட்டு சம்பவம் வரை நிகழ்ந்துள்ளதில் சுரேஷ் சங்கர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீசார் ஏற்கனவே அறிவுறுத்திய நிலையில் நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியில் சுபாஷ் சங்கர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.


கட்டட வேலைக்கு சென்று வந்த நிலையில் ராமையன்பட்டி பகுதியில் நடந்த கோவில் சூறை விழா ஒன்றிற்காக சொந்த ஊருக்கு வந்த போது இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற அரிவாள் வெட்டு சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தின் காரணமாக ராமையன்பட்டி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  கோயில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்த கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.