Chennai Rain Mobile Signal: சென்னையில் பெய்த கனமழையால் முடங்கிய தொலை தொடர்பு சேவை தற்போது வரை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.


கொட்டி தீர்த்த கனமழை:


மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், கடந்த ஞாயிறு இரவு தொடங்கி நேற்று இரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சென்னையில் மாநகரின் செயல்பாடு என்பதே பெரும்பாலும் ஸ்தம்பித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மீட்பு பணிகள் முற்றிலும் சீரடைந்து பிறகு படிப்படியாக மின்சார விநியோகம் தொடங்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






முடங்கியது தொலைதொடர்பு சேவை:


மின்சார விநியோகம் இன்னும் பல இடங்களில் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் தான், நேற்று இரவில் இருந்தே பல இடங்களில் செல்போன் சிக்னல் முடங்கியது. ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் போன்ற பல தொலைதொடர்பு நிறுவனங்களின் சேவை முடங்கியது. இதனால், குடும்பத்தினரையோ, உறவினரையோ தொடர்புகொள்ள முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் வைஃபை வசதியும் முடங்கியுள்ளது. இதனால், புயல்  பாதிப்புகள் தொடர்பான செய்திகளை கூட தெரிந்து கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.


தொலைதொடர்பு சேவை முடங்க காரணம் என்ன?


தொலைதொடர்பு சேவை முடங்க பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. நேற்று தொடர்மழையோடு பல இடங்களில் பலத்த காற்றும் வீசியது. இதனால், சில டவர்கள் சேதமடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது ஒரு காரணமாக கருதப்படுகிறது. பல டவர்களில் இணைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டர்களின் எரிபொருள் தீர்ந்துவிட்டதாலும், அதனை மீண்டும் நிரப்ப முடியாத சூழலும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதுபோன்ற பல காரணங்களால் தான் தொலை தொடர்பு சேவை முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மழைநீர் வடிந்தால் தான் தொலை தொடர்பு சேவையிலும் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.