விழுப்புரம் : மரக்காணம் அருகே கழுவெளி தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் பாய்ந்தோடுவதால் போக்குவரத்து துண்டிப்பு. 10 கிராம மக்கள் அவதி. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையம் ஆத்திக்குப்பம் இடையே, கழுவெளியில் 300 மீட்டர் நீளத்திற்கு தரைப்பாலம் உள்ளது, இந்த தரைப்பாலம் வழியாக மழை நீர் பக்கிங்காம் கால்வாய்க்கு சென்று பின்னர் கடலில் கலக்கும், இந்த தரைப்பாலமானது வண்டிப்பாளையம் கிராமத்தை அடுத்த ஓமிப்பேர், நடுகுப்பம், கிளாப்பாக்கம், நாணக்கால் மேடு ஆகிய கிராமங்களையும் அனுமந்தை அடுத்த ஆட்சிப்பாக்கம், ஊரணி, பாலக்காடு, ஆத்திக்குப்பம், கீழ்பேட்டை, செட்டி நகர், செட்டிகுப்பம், செய்யங்குப்பம் ஆகிய கிராமங்களை இணைக்கும் முக்கிய தரைப்பாலமாக உள்ளது.


10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து பதிப்பு 


இந்த தரைப்பாளத்தின் வழியாக 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மரக்காணம் நகரத்திற்கும் புதுச்சேரிக்கும் சென்று வருவர், தற்போது உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது,  கனமழையால் கழுவெளியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தரை பாலத்திற்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக சுற்றுப்புற கிராம மக்கள் மரக்காணம் வழியாக 20 கி.மீ., துாரம் சுற்று வழியில் நகரத்திற்கு செல்கின்றனர். மேலும் திண்டிவனத்தில் இருந்து வண்டிப்பாளையம் வழியாக அனுமந்தை கிராமத்திற்கு வந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர் மேலும் தரைப்பாளையத்தின் வழியே வாகனங்கள் சென்று அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க மரக்காணம் காவல்துறை சார்பில் பேரிகார்டுகள் அமைத்து பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


சென்னையிலிருந்து வடகிழக்கு திசையில் மிக்ஜாம் புயல்


தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மிக்ஜாம் புயல் தற்போது சென்னையிலிருந்து வடகிழக்கு திசையில் 120 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும் மிக்ஜாம் புயல் நெல்லூருக்கு தென்கிழக்கு திசையில் 90 கிலோ மீட்டர் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைவிட்டு விலகிச்செல்லும் மிக்ஜாம் புயல், தற்போது ஆந்திராவின் நெல்லூர் நோக்கி நகர்ந்து வருவதாகவும், மிக்ஜாம் புயலானது நாளை முற்பகலில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே பாபட்லா அருகே தீவிர புயலாக கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகமானது 90 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் மற்றும் சரிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மிக்ஜாம் புயல் சென்னையை விட்டு நீங்கினாலும் அதன் பாதிப்பு கடுமையாக உள்ளது.சென்னையில் நள்ளிரவுக்கு மேல் படிப்படியாக மழையின் அளவு குறைய தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்தது. அதன்படியே மழை குறைந்துள்ளது