காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதைப் போல,ஒவ்வொரு பெற்றோருக்கும், தங்கள் குழந்தைகள் சிறப்பானவர்களே.
குழந்தையாய் இருந்து,மழலை மொழி பேசி,பெரியவர்களாக பள்ளிக்கூடம் சென்று வரும் வரையிலும், நம்முடைய பேச்சைக் கேட்டு செயல்படுவார்கள். டீனேஜ் பருவம் தொடங்கி,அதற்கு பின்னான உடல் மாற்றம் நிகழும் காலகட்டங்களில், அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் தேவையாக இருக்கிறது. இந்த இடத்தில் பெற்றோர்கள் சிறு குழந்தைகளாக அவர்களை கருதாமல், நண்பர்களாக பாவித்து, டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் உடல் மாற்றங்கள்,பாலியல் பிரச்சனைகள் மற்றும் ஆண் மற்றும் பெண் குறிகளின் சுகாதாரம் ஆகியவற்றைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும்.
இதிலும் குறிப்பாக,மாதவிடாய் பிரச்சினையை பற்றி, பெண் பிள்ளைகளுக்கு தெரிகின்ற அதே அளவிற்கு,ஆண் பிள்ளைகளுக்கும் தெரிய வேண்டியது அவசியம். அவ்வாறு தெரியும் போதே,பாலியல் பற்றிய விழிப்புணர்வும்,பெண் என்பவள் ஒரு உயிர் என்றும், நமக்கு இருக்கும் உணர்வுகள்,அவளுக்கும் இருக்கும்,என்பதையும் புரிய வைக்க முடியும்.
ஆகவே டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும்,உங்கள் ஆண் பிள்ளைகள் ஆனாலும் சரி,வயதுக்கு வந்து விட்ட பெண் பிள்ளைகளானாலும் சரி, அவர்களுக்கு பாலியல் மற்றும் மாதவிடாய் பிரச்சனை,பிறப்புறுப்பு சுகாதாரம் ஆகியவற்றை போதிப்பது அவசியம்,ஒருவேளை உங்களுக்கு அதில் பிரச்சனைகள் இருக்குமானால், உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி,அவர் மூலமாக, அவர்களுக்கு இவற்றை சொல்லித் தரலாம்.பின்பு படிப்படியாக நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இந்த விஷயங்களை நினைவூட்டலாம்.
மேலும் ஆண் ,பெண் என இரு பாலரும் தெரிந்து கொள்ள வேண்டிய பொதுவான விஷயங்களைப் பற்றி விளக்கமாக அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.
மாதவிடாய் என்றால் என்ன,அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்குங்கள். பெண்களின் கருப்பை அமைப்பு, குழந்தை உற்பத்தி, அதனுடன் தொடர்புடைய இந்த மாதவிடாய் பற்றி அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக எடுத்துக் கூறுங்கள். பெண்கள் ஏன் அதைப் பெறுகிறார்கள். மாதவிடாயை வாழ்க்கையின் ஒரு 'சாதாரண' பகுதியாக ஏற்றுக்கொள்ள அவர்களை மனதளவில் தயார்படுத்தும்.
பெண் பிள்ளைகள்,மாதவிடாய் ஆரம்பிக்கும் காலத்தில்,எவ்வாறு தங்களை கவனித்துக் கொள்ள வேண்டும்,எந்த வகையான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். எவ்வாறு ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்,என்பதை பற்றி எல்லாம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக விளக்குங்கள்.மாதவிடாய் ஆரம்பிக்கும் நேரத்தில்,உணர்வு ரீதியாக எப்படி இருப்பது,அதற்கு தயாராக,சானிடரி நாப்கின்களை, எவ்வாறு வைத்திருப்பது,அந்த நேரத்தில் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருப்பது,போன்றவற்றைப் பற்றிய விஷயங்களை,அவர்களுக்கு புரிய வைப்பது அவசியமானது.
மாதவிடாய் தொடங்கும் முன்பே, பெண்கள் தங்கள் மாதவிடாய் சுகாதாரத்தை கட்டுக்குள் வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை விளக்குங்கள். கழிவறையைப் பயன்படுத்திய பிறகு, கைகளைக் கழுவுதல் மற்றும் சானிட்டரி பேட்களில் இருந்து பீரியட் பேண்டீஸுக்கு மாறுவதற்கான யோசனைகளை அவர்களுக்கு வழங்கலாம்.தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும் சுகாதாரமற்ற நடத்தை பற்றி அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.
இதைப் போலவே,டீன் ஏஜில் இருக்கும் ஆண் குழந்தைகளுக்கு, அவர்கள் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருப்பது,மற்றும் அதன் பயன்பாடு, இந்த வயதில், உடம்பில் ஏற்படும் உணர்வு மாற்றங்கள், ஆகியவற்றைப் பற்றிய புரிதலை அளிப்பதும் மிகவும் முக்கியம். இவற்றையெல்லாம் ஒரு நண்பரை போல, உங்களால் விளக்க முடியாவிட்டால்,உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி, இந்த பருவத்தில் பிள்ளைகளுக்கு ஏற்படும் மாதவிடாய் மற்றும் பாலியல் பிரச்சனைகள் குறித்து,அவர்களின் தேவையை அறிந்து ஆலோசனைகளை வழங்கலாம்.
முதலில் குடும்பத்திற்குள்ளேயே சிறுவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது வளர்ந்து வரும் இளம் பருவத்தில் அவர்கள் புரிதலுடன் செயல்பட, வேறுபாடுகள் இன்றி செயலாற்ற அடித்தளமாக இருக்கும்.