சேலம் மாவட்டம் அரிசிபாளையம் சின்னப்பன் தெருவை சேர்ந்த விஜய குமார் (29) என்பவர் லாரிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார். விஜய குமாருக்கு ரேகாதேவி (28) மற்றும் வைஷ்ணவி (27) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு 11 வயதில் ஒரு மகனும், 2 வது மனைவிக்கு 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து திருவாக்கவுண்டனூர் பகுதியில் வசித்து வருகிறார். 2 வது மனைவி வைஷ்ணவியுடன் விஜயகுமார் வசித்து வந்தார். கடந்த மாதம் 25 ஆம் தேதி கணவன்-மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக வைஷ்ணவி அவரது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். கடந்த ஒன்றாம் தேதி வீட்டில் தனியாக இருந்த விஜய குமார் நேற்று காலை 8 மணி அளவில் வீட்டில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்த புகார் பேரில் பள்ளப்பட்டி காவல்துறையினர் சம்பவஇடத்திற்கு சென்று விஜயகுமார் உடலை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் விஜயகுமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில் இடுப்பு எலும்பு உடைந்தும், அதிகளவில் காயங்களும் இருந்தது தெரிய வந்தது. பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (26), அய்யனார் (33) மற்றும் சிவா (32) மூவருக்கும் விஜயகுமாருக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் விஜயகுமார் வீடு திரும்பிவுள்ளார். இதையடுத்து வீட்டுக்கு வந்த பிரபாகரன், அய்யனார் மற்றும் சிவா ஆகிய மூவரும் விஜயகுமாரை தாக்கியுள்ளனர். அப்பொழுது உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் மூவரையும் கைது செய்த பள்ளப்பட்டி காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கொரோனா பரிசோதனைக்கு பின்னர் சிறையில் அடைத்தனர்.