மத்திய பிரதேசம் மொரேனா பகுதியில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பசியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு ’புஜியா’ (ஓம பொடி ) செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  பாரம்பரிய நடைப்பயணத்தின்போது பசியால் வாடும் குழந்தைகளுக்கு பசியாற்ற ‘பஜியா’க்களை வறுக்கும் வீடியோதான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. 






சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக அம்மாவட்டத்தில் பாரம்பரிய நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளி மாணவர்களை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு அழைத்து சென்றனர்.  அந்த நடைப்பயணத்தில் கழந்துகொண்ட ஐஏஎஸ் அதிகாரியும், ​​மொரேனா ஜிலா பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரியுமான இச்சித் கட்பலே, பள்ளி மாணவர்களுடன் கர்ஹி படாவலியை அடைந்தார்.


அப்போது அங்கு பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட இருந்தது. ஆனால், அதுவரை உணவு தயாராகவில்லை.  திட்டம் காலதாமதமானதால், குழந்தைகளுக்கு பசி எடுக்க தொடங்கியுள்ளது. இதனால், மனவேதனை அடைந்த இச்சித் கட்பலே குழந்தைகளுக்கு காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்த சமையல்காரர்களிடம் சென்றார். அங்கு ஆள் பற்றாக்குறை இருப்பதை கண்டு, புஜியாவை வறுக்க உதவி செய்தார். இதையடுத்து, அங்கிருந்த மற்ற கல்வி அதிகாரிகளும் உதவி செய்ய தொடங்கினர். 


இதுகுறித்து பேசிய அங்கிருந்த சமையல்காரர்கள், “ இதுபோன்ற அதிகாரிகள் எங்களுடன் சரி சமமாக உட்கார்ந்து இருந்தது இதுவே முதன்முறை. இந்த தருணத்தை மறக்க முடியாது “ என்று தெரிவித்தார். 


அப்போது பேசிய ஐஏஎஸ் அதிகாரி கட்பலே, “இங்கிருந்த மக்கள்  இதை ஒரு பெரிய விஷயமாக சொல்கிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை இது சாதரண விஷயம்தான். குழந்தைகள் பசியுடன் இருந்தார்கள், எனக்கும் குழந்தைகள் மீது ஒரு பற்றுதல் உள்ளது. அவர்களை அழைத்துச் சென்றபோது, ​​அவர்களுக்கு உணவு, பானங்கள் போன்றவற்றுக்கு முறையான ஏற்பாடுகளைச் செய்வது நமது தார்மீகப் பொறுப்பாகும். அதனால் தான், நான் என் பொறுப்பையும் இதன்மூலம் நிறைவேற்றினேன்.” என தெரிவித்தார்.