தமிழகம் முழுவதும் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்க தமிழக  காவல்துறை தலைமை இயக்குநர்  கஞ்சா வேட்டை  3.0-வினை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் கஞ்சா பயன்பாட்டை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதன்படி அம்பாசமுத்திரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்பீர்சிங் தலைமையில் வி.கே.புரம் காவல் ஆய்வாளர் பெருமாள் மற்றும் அம்பாசமுத்திரம் உட்கோட்ட தனிப்படை போலீசார்  அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா  விற்பனை செய்பவர்களை  தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.




அதன்படி இன்று மாலை நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த விக்கிரமசிங்கபுரம் கோட்டை விளைபட்டி பகுதியில் விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.  வாகன தணிக்கையின்போது,  சந்தேகத்திற்கிடமான மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின் போது மினி லாரியின் அடியில்  இரகசிய கபோர்டு அமைத்து அதில் பண்டல் பண்டலாக கஞ்சாவை அடுக்கி வைத்து கொண்டு சென்றது தெரிய வந்தது.  கஞ்சா பண்டல்கள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர் மினி லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இராமானுஜம்புதூரை சேர்ந்த தளவாய்மாடன் (24) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.




விசாரணையில், ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்பட்ட நிலையில் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்படவிருந்தது தெரியவந்துள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 100 கிலோ எடையுள்ள கஞ்சாவின் மதிப்பு சுமார் 25 லட்சம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் காவல்துறை நடத்திய தொடர் விசாரணையில் இவ்வழக்கில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த பிரவீன் மற்றும் புதுக்குடியை சேர்ந்த அருள்பாண்டி உள்ளிட்டவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.


இந்த நிலையில் அவர்களை தீவிரமாக தேடி வரும் நிலையில் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல கிலோ கணக்கில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி செல்லப்பட்டு எங்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  நெல்லையில் தொடர்ச்சியாக வாகனங்களில் ரகசிய அறை அமைத்து புகையிலை பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் நடைபெற்று வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது..











பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண