உலக அளவில் பெண்களுக்கு பாதுகாப்பான முதன்மை நாடு இந்தியா என்பதை எடுத்துக்காட்டும் வகையில் மத்திய பிரதேச மாநிலம் கோபால் நகரில் நவம்பர் ஒன்றாம் தேதி தனது மிதிவண்டி பயணத்தை தொடங்கிய மலையேறும் வீராங்கனை ஆசா மால்வியா 100 நாட்களை கடந்து 7300 கிலோமீட்டரை கடந்து நேற்று சேலம் வந்தடைந்தார். சேலம் வந்த அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பாலச்சந்தர் பூங்கொத்தை கொடுத்து வரவேற்றார். பின்னர் ஆஷா மால்வியாவிடம் பயணம் குறித்து கேட்டறிந்த கூடுதல் ஆட்சியர் பயணம் வெற்றி பெற வாழ்த்தி அனுப்பி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பெண்ணிற்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்கள் வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தனர். 



 சேலத்தில் தொடங்கிய சைக்கிள் பயணத்தை தருமபுரியில்  முடித்தார். இந்நிலையில் ஆஷா மால்வியா கூறும் போது, நவம்பர் ஒன்றாம் தேதி கோபாலில் தனது பயணம் தொடங்கியது. இதுவரை மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கேரளா, தமிழ்நாடு என 7 மாநிலங்களைக் கடந்து தனது பயணத்தைத் தொடர்ந்து வருவதாகவும், 100 நாட்களில் 7300 கிலோ மீட்டர் பயணித்திருப்பதாகவும், 252 நாட்களில் 25 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் கூறினார். 



மேலும், தமிழகத்தை பொறுத்தவரை தனக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு பொருத்தவரை பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிறந்த மாநிலமாக உள்ளது என்று கூறினார். மேலும் இந்தப் பயணத்தை ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி புது டெல்லியில் முடிக்க உள்ளதாகவும் கூறினார். நமது மூன்றாவது வயதினிலே தந்தையை இழந்துவிட்டதாகவும், கூலி வேலை செய்து தாய் தன்னை முதுகலை பட்டப்படிப்பு வரை படிக்க வைத்துள்ளார். இந்த நிலையில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசையில் தற்போது சைக்கிள் பயணத்தில் ஈடுபட்டு வருகிறேன் என்று கூறினார்.