விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை அடுத்த குந்தலம்பட்டு கிராமத்தைச் சார்ந்த சின்னசாமி - கன்னியம்மாள் இவர்களின் மகனான கட்டட மேஸ்திரி முருகன் (30) என்பவருக்கு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த செவரப்பூண்டி கிராமத்தைச் சார்ந்த சின்னதுரை - மஞ்சுளா இவர்களின் மகள் சந்தியா (23) என்பவருக்கு கடந்த செப்டம்பர் 9-ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் மணமகன் இல்லத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு குந்தலம்பட்டு கிராமத்தில் முருகன் வீட்டுக்கு வந்த சந்தியா மற்றும் முருகன் கடந்த 12-ஆம் தேதி சந்தியாவின் அம்மா வீட்டிற்கு விருந்துக்காக கணவருடன் சென்றுள்ளனர். நேற்று நடைபெறுவதாக இருந்த விருந்திற்கு முருகனின் அம்மா மற்றும் அப்பாவும் வந்திருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சந்தியா வீட்டின் அருகே குளித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டிருந்தபொழுது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக வீட்டிலிருந்த உறவினர்கள் சந்தியாவை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சந்தியாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். சந்தியா எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து சந்தியாவின் தந்தை சின்னதுரை கீழ்பென்னாத்தூர் போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு சந்தியாவின் கணவர் முருகன் தான் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி மாமனார் வீட்டில் இருந்து சென்ற நிலையில் விழுப்புரம் மாவட்டம் குந்தலம்பட்டு கிராமத்தில் அவர் வீட்டு அருகே உள்ள வயல்வெளி பம்பு செட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருமணம் ஆகி 6 நாட்கள் ஆன நிலையில் மனைவி இறந்த மன உளைச்சலில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த இரு தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக அவலூர்பேட்டை போலீசாரும், கீழ்பெண்ணாத்தூர் போலீசாரம் தனித்தனி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் சந்தியாவிற்கு செவரப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனரான ஏழுமலை என்பவருடன் காதல் இருந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக திருவண்ணாமலை மாவட்டம் சோமஸ்பாடி பகுதியை சேர்ந்த ஒருவருடன் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் ஒரு மாதத்திலேயே சந்தியா வாழாமல் வந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. இதனிடைய அவலூர்பேட்டை அடுத்த குந்தலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஆன முருகன் என்பவருடன் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முருகன் இல்லத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாகவும், சந்தியாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத நிலையில் அவரின் பெற்றோர்கள் வற்புறுத்தலால் சந்தியா திருமணத்துக்கு சம்மதித்தாகவும் தெரியவந்தது.
மேலும் சந்தியா தற்கொலை செய்துகொண்ட தகவல் அறிந்து அவருடன் தொடர்பில் இருந்த ஏழுமலை என்பவரும் லாரியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமணமான ஒரு வாரத்திலேயே புதுமண தம்பதிகளான கணவன் மனைவி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.