குஜராத் மாநிலம், ஜாம்நகர் மாவட்டத்தில் மூன்று மாத கைக்குழந்தை உள்பட கிணற்றில் இருந்து இரண்டு குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இன்று (அக்.15) ஐந்து வயது குழந்தையான தேவராஜ் மற்றும் மூன்று மாத குழந்தை ரியா ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன.  இக்குழந்தைகளின் தாயையும் காணவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தாஹோத் பகுதியைச் சேர்ந்த பதியா பலாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் நித்தேஷ் தங்கரியா என்பவரின் பண்ணையில் கூலி வேலை செய்து வரும் நிலையில், நேற்று (அக்.15) மாலை வீடு திரும்பிய பதியா ​தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் காணாமல் திகைத்துள்ளார்.


தொடர்ந்து அவர்களை எங்கு தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் காணாமல் போனவர்களை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.


இந்நிலையில் முன்னதாக குழந்தைகளின் உடல்களை கிணறுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள காவல் துறையினர் பதியா பலாஷின் மனைவியை தேடி வருகின்றனர்.


பதியாவின் மனைவி தற்கொலை செய்து கொண்டிருக்காவிட்டால், அவர் தான்  குழந்தைகளை கிணற்றில் வீசியிருக்க வேண்டும் எனவும் காவல் துறையினர் முன்னதாக சந்தேகம் தெரிவித்துள்ளனர். 


மற்றொரு சம்பவம்


இதேபோல் முன்னதாக நெல்லையில் தாயுடன் குளிக்கச் சென்ற இரண்டு பச்சிளம் பெண் குழந்தைகள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


நெல்லை மாவட்டம், சுத்தமல்லியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் நெல்லையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர் நெல்லை டவுண் தனியார் கடையில் பணி செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கண்ணனுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு மாதுரி தேவி என்ற நான்கரை வயது பெண் குழந்தையும், நிரஞ்சனா என்ற ஏழு மாத பெண் குழந்தையும் உள்ளது.


இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நெல்லை டவுணில் உள்ள தனது தாய் வீட்டில் மாரியம்மாள் இருந்து உள்ளார். முன்னதாக சுத்தமல்லி பெரியார் நகரில் உள்ள கணவன் வீட்டிற்கு சென்ற நிலையில், சுத்தமல்லி அணைக்கட்டு பகுதிக்கு தனது இரு குழந்தைகளுடன் குளிக்க சென்று உள்ளார்.


அப்போது குளித்துவிட்டு அணைக்கட்டு கரை பகுதியில்  வெளியே நடந்து வந்த போது மூத்த பெண் குழந்தை தவறி ஆற்றுக்குள் விழுந்து விட்டதாகவும், அதனை காப்பாற்ற கை குழந்தையுடன் தாய் ஆற்றில் குதித்து மூத்த குழந்தையை தேடிய நிலையில் கைக்குழந்தையும் ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது.


பாசனத்திற்காக அணைக்கட்டில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால்  தண்ணீரில் மாரியம்மாளும் இழுத்து செல்லப்பட்ட நிலையில்  ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் தண்ணீரில் தத்தளித்த மாரியம்மாளை மீட்டதுடன் உயிரிழந்த நிலையில் 7 மாத பெண் குழந்தையை அங்கே குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மீட்டுள்ளனர்.


இது குறித்த தகவல் காவல்துறைக்கும் தீயணைப்பு மீட்பு படையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் தண்ணீரில் விழுந்து இறந்த  7 மாத  குழந்தையின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் விழுந்த மூத்த பெண் குழந்தையை தேடும் பணியை மிதவைகள் உதவியுடன்  தொடக்கினர்.


குழந்தை விழுந்த இடத்திலிருந்து சுமார் 200 அடி தொலைவில் புதரில்  சிக்கியிருந்த  குழந்தையையும் மீட்டனர். 108 ஆம்புலன்ஸில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையின் நாடி துடிப்பு குறைவாக இருப்பதாக தெரிவித்த நிலையில் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.











 


இரு குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் தாயை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் மூத்த மகள்  ஆற்றிற்கு குளிக்க செல்ல வேண்டும் என கூறியதால் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சுத்தமல்லி அணைக்கட்டு பகுதிக்கு ஆட்டோவில் குளிக்கச் சென்றதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.