தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களில் 6,718 பேர் வறுமை, குடும்ப சூழல், நிதி பற்றாக்குறை, உயர் படிப்பில் சேர ஆர்வமின்மை, தொழில் செய்தல், அருகாமையில் கல்லூரி இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயர் கல்வியைத் தொடரவில்லை என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளதாவது:


"2021-22ஆம்‌ கல்வி ஆண்டில்‌ 12ஆம்‌ வகுப்பு முடித்த மாணவர்கள்‌, அனைவரும்‌ இவ்வாண்டு 2022-23ல்‌ உயர்கல்வி தொடர்ந்துள்ளனரா என்பதனை அறிந்திடவும்‌, அவ்வாறு உயர்கல்வி தொடரா மாணவர்கள்‌ இருப்பின்‌ அதற்கான காரணத்தை கண்டறிந்து, அதனை களைந்து, அவர்கள்‌ உயர்கல்வி தொடர்ந்திட தேவையான வழிகாட்டுதல்கள்‌ வழங்கவும்‌, 26.08.2022 அன்று அனைத்து அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பெற்றோர்‌- மாணவர்கள்‌ கூட்டம்‌ நடைபெற்றது. 


* இந்த பெற்றோர்‌-மாணவர்கள்‌ கூட்டத்தில்‌ 79,762 மாணவர்கள்‌ கலந்துகொண்டு உயர்கல்வி ஆலோசனை பெற்ற மாணவர்களில்‌ 8,249 பேர் இவ்வாண்டு உயர்கல்வி தொடராதது கண்டறியப்பட்டது. இதில்‌, 1531 மாணவர்கள்‌ தற்போது உயர்கல்வி சேர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, 6718 மாணவர்கள்‌ கீழ்காணும்‌ காரணங்களால்‌ உயர்கல்வி தொடர இயலாத நிலை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.


* வறுமை
* குடும்பசூழல்‌
* நிதிபற்றாக்குறை
* தேர்வில்‌ தோல்வி அடைந்தமை
*  உயர்படிப்பில்‌ ஆர்வமின்மை
* பணியில்‌ சேர்ந்தமை
* பெற்றோர்‌ அனுமதியின்மை
* தேர்வு எழுதாமை 
*  உடல்நலமின்மை
*  தொழில்‌புரிதல்‌
* கல்லூரியில்‌ விரும்பிய பாடத்தில்‌ சேர்க்கை கிடைக்காமை 
* அருகாமை கல்லூரி இல்லாமை
* மறுதேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும்‌ கல்லூரிகளில்‌ மாணவர்‌ சேர்க்கை நிறைவடைந்தமை.




உயர்கல்வி தொடர்வதற்கான உத்திகள்‌


இதில் 4,007 பேரை தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ள முடியவில்லை. அடுத்த கட்டமாக, இத்தகு மாணவர்களில்‌ 2,711 பேருக்கு மாவட்ட ஆட்சியர்‌ தலைமையின்‌ கீழுள்ள பிற துறையினருடனும்‌ இணைந்து உயர்கல்வி தொடர்ந்து பயில கீழ்காணுமாறு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.






* இதன்படி, 20.10.2022 அன்று காலை 10.00 மணிக்கு, மாவட்டஆட்சியர்‌ தலைமையில்‌, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்ட அரங்கில்‌ முகாம்‌ நடத்தப்பட வேண்டும்‌. இம்முகாமில்‌ கலந்து கொள்ள வேண்டிய துறைகளின்‌ பங்கேற்பினை மாவட்ட ஆட்சியர்‌ உறுதி செய்தல்‌ வேண்டும்‌.


* இம்முகாமில்‌ மாணவர்கள்‌ சார்ந்த பள்ளிகளின்‌ தலைமையாசிரியர்‌ வாயிலாக 2 நாட்களுக்கு முன்னதாகவே தகவல்‌ தெரிவிக்கப்பட்டு அவர்தம்‌ பெற்றோர்கரூடன்‌ தவறாமல்‌ கலந்து கொள்ள முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ நடவடிக்கை மேற்கொள்ளுதல்‌ வேண்டும்‌’’.


இவ்வாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.