சென்னையில் பள்ளி அருகே இரு சக்கர வாகனத்தில் வைத்து  கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.


ஆபரேஷன் கஞ்சா எனும் பெயரில் தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனையைக் குறிவைத்து காவல் துறையினர் தொடர் நடவடிக்கை எடுத்து வந்தாலும், மற்றொருபுறம் பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கஞ்சா போதைக்கு அடிமையாகும் போக்கு தொடர்ந்தே வருகிறது.


சென்ற ஆண்டு தமிழ்நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்ற ஆபரேஷன் கஞ்சா வேட்டை இந்த ஆண்டு 3.0 என்ற பெயரில் தொடர்ந்து வரும் நிலையில், தேடுதல் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு  கஞ்சா விற்பனையாளர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


குறிப்பாக தலைநகர் சென்னையில் "போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive aganst Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


அந்த வகையில் இன்று (ஜன.19) சென்னையில் பள்ளி அருகே கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட நபர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.


R-1 மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் காவல் குழுவினர் இன்று (19.01.2023) காலை, மாம்பலம், வி.என்.ரோட்டில் உள்ள பள்ளி அருகே கண்காணித்தபோது, அங்கு ஒருவர் இருசக்கர வாகனத்தில் வைத்து போதை தரும் கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது.


இதனையடுத்து கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்திரன் யாதவ் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


மேலும் கைது செய்யப்பட்ட சுரேந்திரன்யாதவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இராயப்பேட்டை பகுதியில் பீடா கடை நடத்தி வரும் தனது மாமா அமுல்குமார் யாதவ் என்பவருடன் சேர்ந்து பீகார் மாநிலத்திலிருந்து கஞ்சா சாக்லேட்டுகளை வரவழைத்து சென்னையில் அவர் விற்பனை செய்தது தெரியவந்தது.


இந்நிலையில், தலைமறைவாக உள்ள அமுல்குமார் யாதவ் என்பவரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். விசாரணைக்குப் பின் கைது செய்யப்பட்ட சுரேந்திரன் யாதவ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.