தி கோட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜயின் தி கோட் பட ட்ரெய்லர் வெளியாகி பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்துள்ளது. முழுக்க முழுக்க டெக்னிக்கலான ஒரு படம் என்பதால் இந்தப் படத்தின் ட்ரெய்லர் முதற்கொண்டு சவால் மிக்கதாக படக்குழுவிற்கு இருந்துள்ளது.
இதனால் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியை மிக சுருக்கமானதாக ஒருங்கிணைத்தது படக்குழு. சென்னை பிரசாத் லேப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் இயக்குநர் வெங்கட் பிரபுவை நாலா திசையிலும் கேள்விகளால் துளைத்துள்ளனர். சீரியஸான கேள்விக்கு சீரியஸாகவும் சுமாரான கேள்வி ஜாலியாகவும் பதிலளித்தார் வெங்கட் பிரபு.
விஜய் அரசியலை வற்புறுத்தியது இல்ல
இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலானவர்களின் கேள்வி ஒன்றாக தான் இருந்தது. விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வர இருக்கும் நிலையில் இந்த படத்தில் தனது அரசியலை காட்ட வற்புறுத்தினாரா? இதற்கு வெங்கட் பிரபு இப்படி பதிலளித்தார் ”எனக்கு அரசியலே தெரியாது. எனக்கு தெரியாதுன்னு அவருக்கும் தெரியும். அடுத்து அரசியல்ல நான் இத தான் பண்ணப் போறேன்னு அவர் என்கிட்ட பேசமாட்டார். விஜய் சார் ஒரு படத்தை படமாக மட்டுமே பார்க்கிறார். என்னோட படத்துல விஜய் எனக்கு இந்த டயலாக் வேணும் , நான் அரசியல் பேசனும், மக்களுக்கு நான் இத பண்ணனும்.. அத பண்ணனும்.. அப்டியெல்லாம் ஒரு வார்த்தைகூட என்கிட்ட சொல்லல. விஜய்யுடைய கட்சிக் கொடி என்னனு எனக்கு தெரியாது. இந்த படத்தில் இருக்கும் சில டயலாக் கூட உங்களுக்கு அரசியல் மாதிரி தெரியும்.. ஆனா விஜய் கட்சி தொடங்கி இருப்பதால் உங்களுக்கு அப்படி தோன்றலாம். விஜய் எப்போதும் தனது அரசியலை வற்புறுத்தியது இல்லை" என்று வெங்கட் பிரபு கூறினார்
கில்லி ரீதியான விஷயம்
தி கோட் படத்தின் ட்ரெய்லரில் இறுதியில் விஜய் முருகன் பாடலை பாடிவருவது விஜயின் அரசியல் ரீதியான விஷயமா என்று பத்திரிகையாளர் கேள்விக்கு இப்படி பதிலளித்தார் "அது கில்லி ரீதியான விஷயம். கில்லி படம் பார்த்திருக்கீங்களா. அந்த படத்தில் வந்தபோது ஏன் நீங்க அரசியல்னு கேக்கல..இதே படத்தில் மங்காத்தா படத்தின் இனிமேல் குடிக்கவே மாட்டேன் என்கிற வசனம் வருகிறது. எங்களுக்கு பிடித்த படங்களில் இருக்கும் காட்சிகளை நாங்கள் பயன்படுத்துகிறோம்" என்றார்
அதேபோல் விஜயின் அரசியல் கட்சியில் வெங்கட் பிரபுவின் குடும்பத்தில் ஒருவரை என்.எல்.ஏ வாக எதிர்பார்க்கலாமா என்கிற கேள்விக்கு லேசாக கடுப்பான வெங்கட் பிரபு ”உங்க வீட்ல நடக்கிறத நான் வந்து உங்க கிட்ட கேக்குறனா? எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு நான் ஏன் உங்ககிட்ட சொல்லனும்" என்று பதிலளித்தார். பிரேம்ஜி ஒரு கும்பிடு போட்டார்