திருவண்ணாமலை வேங்கிக்கால்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது பிரபல தனியார் உணவகம். இந்த உணவகத்தில் நேற்று இரவு திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சச்சின் வயது (25) மற்றும் அவரது நண்பர் வெங்கடேஷ் வயது (26) ஆகியோர் இரவு உணவு உண்பதற்காக சென்று ஹோட்டலில் அமர்ந்து சாம்பார் இட்லி 2 ஆர்டர் செய்துள்ளனர்.


அவர்கள் அளித்த ஆர்டரின் பெயரில் ஓட்டலில் இருந்து கொண்டு வரப்பட்ட சாம்பார் இட்லியை சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது சாம்பாரில் இருந்து வெளியே வந்த புழுவைக் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் ஹோட்டல் ஊழியர்களிடம் கேட்டபொழுது நாங்களும் திருவண்ணாமலை சேர்ந்தவர்கள் தான் அமைதியாக சென்று விடுங்கள் என்று மிரட்டும் தொனியில் பேசியதுடன் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். 


 




மிரட்டிய உணவகத்தினர்;


இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உணவு ஆர்டர் செய்த சச்சின் மற்றும் வெங்கடேசனிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் வெங்கடேசன் சாப்பிட்ட உணவால், வாந்தி எடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


பிரபல உணவகம் ஒன்றில் சாப்பிடச் சென்ற பொழுது உணவில் புழு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு முறையான பதில்களை கூறாமல் மிரட்டும் தொணியில் உணவக ஊழியர்கள் பேசியது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது இதுவரை எவ்வித புகார் வரவில்லை என்றும் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.




அதிகாரிகள் ஆய்வு:


இதனைத் தொடர்ந்து   இன்று திருவண்ணாமலை நகர உணவு பாதுகாப்பு அலுவலர் எழில் மற்றும் செய்யார் உணவு பாதுகாப்பு அலுவலர் இளங்கோவன் ஆகிய இருவரும் வேங்கிக்கால் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அடையார் ஆனந்த பவன் என்ற உணவகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். உணவகத்தில் குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ள உணவுப் பொருட்களின் தரம், சமையல் கூடும், முறையாக உணவு சமைக்கின்றனரா என்ற பல்வேறு அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் உணவு பொருட்களை பாதுகாப்பாக வைத்து வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.


மேலும்   இளைஞர்கள் வாங்கிய சம்பார் இட்லியில் எவ்வாறு புழு வந்தது என உணவக ஊழியர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளதாகவும், அதற்கு உரிய பதிலை உணவக நிர்வாகம்  அளிக்க வேண்டும் வேண்டுமென்று உணவக நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தனர்.