தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பலவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மோசடி, சீட் மோசடி, பணத்தை முதலீடு செய்தால் பலமடங்கு அதிகமாக தருவதாக கூறி மக்களின் மனதில் ஆசையை வளர்த்து பணத்தை கொள்ளையடித்து செல்வது என சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு, காவல்துறையினர் பல்வேறு விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி, சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் விழிப்புணர்வு செய்து வருகிறார்கள். ஆனால், பொதுமக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பதே மோசடிகள் அதிகரிக்க காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில்  திருச்சியை தலைமையிடமாக கொண்டு சென்னை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், கும்பகோணம், புதுச்சேரி உள்பட 7 இடங்களில் பிரபல நகைக்கடை செயல்பட்டு வந்தது. இங்கு ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் 2 சதவீத வட்டி வீதம் மாதந்தோறும் ரூ.10 ஆயிரமும், 10 மாத முடிவில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்கமும் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டனர். இதனை நம்பி பலரும் ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.


ஆரம்பத்தில் முதலீடு செய்தவர்களுக்கு வட்டிக்கான காசோலைகளை வழங்கினர். ஆனால் கடந்த 2 மாதமாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட காசோலைகள் பணமில்லாத காரணத்தால் திரும்பி வந்தது. இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு ஓரிரு வாரங்களில் பணம் கொடுத்து முடிப்பதாக நகைக்கடை சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் பணம் வழங்கப்படவில்லை. மேலும் பலர் நகைச்சீட்டிலும் சேர்ந்து பணம் கட்டி வந்தனர். இந்நிலையில் திருச்சி கடை தவிர, மற்ற கடைகள் அனைத்தும் திடீரென மூடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாடிக்கையாளர்கள் திருச்சியில் உள்ள நகைக்கடை முன்பாக  திரண்டனர்.




பின்னர் நகைக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து, அனைவரும் கலைந்து கலைந்து சென்றனர். இந்த நகைக்கடையில் ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ள நிலையில் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் முற்றுகை போராட்டம் நடந்த நிலையில், நேற்று காலையிலும் ஏராளமான வாடிக்கையாளர்கள் மீண்டும் கே.டி.ஜங்ஷன் நான்குரோடு சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். முறைப்படி புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்.. பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசை தான், ஆனால் உடனடியாக பணத்தை இரட்டிப்பாக மாற்றி கோடிஸ்வரனாக ஆகலாம் என பலரும் எண்ணுகிறார்கள், அது முற்றிலும் தவறு என்றார். இனிமேல் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஆகையால் வருங்காங்களில் பணத்தை இரட்டிபாக தருகிறோம், நிறுவனங்கள், நிலங்கள்., தங்கம் மீது முதலீடு செய்யுங்கள் என ஆசை வார்த்தை யாரு கூறினாலும், அதை  தயவு செய்து நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.