திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் ஸ்தலமாகவும் விளங்கும் அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் பத்து நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் அடுத்த மாதம் 17 ஆம் தேதி அதிகாலை தங்க கொடிமரத்தில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறை முன்பு பரணி தீபமும் மாலை 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் கோவில் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன், கோயில் இணை ஆணையர் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


 




இந்த ஆலோசனை கூட்டத்தில், அருணாச்சலேஷ்வரர் கோயில் தீபத் திருவிழா வரும் நவம்பர் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. நவம்பர் 26-ம் தேதி மகா தீபத் திருவிழா நடைபெறவுள்ளது. இந்தாண்டு தீபத் திருவிழாவுக்கு பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நகராட்சி சார்பில் 13 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுவதுடன் கிரிவலப்பாதை மற்றும் நகரப்பகுதிகளில் சாலை பணிகள், தூய்மைப் பணிகள், குடிநீர் வசதி உள்ளிட்டவைகளை மேம்படுத்துவது குறித்து முறையாக ஆய்வு செய்ய வேண்டும். இந்தாண்டு காவல் துறை பாதுகாப்பு பணியில் 13 ஆயிரம் பேர் ஈடுபடுவார்கள். சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்குவது, தீப விழா அன்று மலை மீது ஏறுவதற்கு அனுமதி சீட்டு வழங்குவது, அன்னதானம் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும். கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் மருத்துவ குழுக்கள் அமைக்க வேண்டும்.


 






ஆம்புலன்ஸ் சேவை, மீட்பு பணிகளுக்கு தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கோயில் சார்பில் தூய்மைப் பணிகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாட வீதியுலா நடைபெறும் நாட்களில் 11 இடங்களில் தற்காலிகமாக கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். கிளிகோபுர நுழைவு வாயிலில் ஸ்கேனிங் இயந்திரம் மூலம் பொருட்களை சோதனை செய்ய வேண்டும். கிழக்கு ராஜகோபுரம், தெற்கு ராஜகோபுரம், வடக்கு ராஜகோபுரம் நுழைவு வாயில்களில் 'மெட்டல் டிடெக்டர்' கருவி மூலம் சோதனை செய்ய வேண்டும். தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா வரும் 23-ம் தேதி நடைபெறும். தேரோட்டத்துக்கு முன்பாக தேர்களின் பாதுகாப்பு உறுதிச்சான்று பெற வேண்டும்  என்று அறிவுறுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.