Crime: தயாநிதி மாறன் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம் திரும்ப கிடைத்துவிட்டதாக சம்பந்தப்பட்ட வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.


சைபர் குற்றவாளிகள்:


ஆதிகாலம் முதல் அதிநவீனம் எனப்படும் ஸ்மார்ட் உலகம் வரை திருட்டு என்பது மட்டும் அழியாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏதாவது ஒரு குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து விடவேண்டும் என்ற நோக்கத்துடன் பலரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


தற்போது பணப்புழக்கம் குறைந்து டிஜிட்டல் வழியிலேயே பணப்பரிமாற்றம் நடைபெறுவதால் திருடர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டு டிஜிட்டல் வழியில் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன. தொழில் நுட்ப காலத்திற்கு ஏற்ப தற்போது திருடர்களும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி திருடி வருகின்றனர்.


வங்கி கணக்கில் இருந்து பணம் திருட்டு:


இந்நிலையில், மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறனின் வங்கி கணக்கில்  இருந்து ரூ.99,999 பணம் திருடிவிட்டதாக அவர் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  சென்னை ஆர்.ஏ.புரம் போர்ட் கிளப் பகுதியில் எம்.பி. தயாநிதி மாறன் வசித்து வருகிறார். நேற்று இவரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில், வங்கியில் பேசுவதாக கூறி வங்கி பரிவர்த்தனை விவரங்களை கேட்டுள்ளனர். இதனை அடுத்து, சுதாரித்துக் கொண்ட தயாநிதி மாறன், வங்கி கணக்கு விவரங்களை தராமல் அந்த இணைப்பை துண்டித்துவிட்டார்.


இணைப்பை துண்டித்த சில நிமிடங்களிலே, தயாநிதி மாறனின் செல்போன் எண்ணுக்கு மெசேஜ் ஒன்று வந்தது. அதில், அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூ.99,999 எடுக்கப்பட்டதாக தகவல் இருந்தது. வங்கி விவரங்கள், ஓடிபி எண் எதையும் பகிராமல் தனது வங்கி கணக்கில் பணம் திருடப்பட்டது குறித்து தயாநிதி மாறன் ஆதங்கத்துடன் சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.


ரீட்டன் ஆன பணம்:


பின்னர், பணம் திருட்டுப்போனது குறித்து சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் தயாநிதி மாறன் புகார் அளித்தார். அதில், ஆக்ஸில் வங்கியில் இருந்து பேசுவதாக தனக்கு அழைப்பு வந்தது. இந்தியில் பேசியுள்ளனர்.  வங்கி விவரங்கள் குறித்து கேட்டனர். நான் அழைப்பை துண்டித்து சிறிது நேரத்தில்  99,999 ரூபாய் பணம் எடுக்கப்பட்டது போன்று மெசேஜ் வந்தது.


எந்த ஒரு ஓடிபி மற்றும் வங்கி விவரங்களுக்கு தராமல் பணம் திருடப்பட்டது. எனவே, சம்பந்தப்பட்ட மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறு புகார் அளித்திருந்தார். இந்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தயாநிதி மாறனின் பணம் திரும்ப கிடைத்துவிட்டதாக சம்பந்தப்பட்ட வங்கி விளக்கம் அளித்துள்ளது.


இதுகுறித்து தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஆக்ஸில் வங்கி பதிவிட்டிருப்பதாவது, "திருடப்பட்ட பணம் உங்களது வங்கி கணக்கிற்கு திரும்ப கிடைத்துவிட்டது. பணம் திருடப்பட்ட விவரங்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.