பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டன. இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


11 ஆசிரியர் சங்கங்கள் 


எண்ணும் எழுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும், எமிஸ் இணையதளப் பணிகளை ஆசிரியர் மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், அதேபோல கற்பித்தலுக்குப் போதிய நேரம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்று டிட்டோஜாக் என அழைக்கப்படும் தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்தது.


இந்த மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தை, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வளாகத்தில் அக்டோபர் 13ஆம் தேதி நடத்த டிட்டோஜாக் திட்டமிட்டது. இதை அறிந்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முக்கிய நிர்வாகிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.


இதன்படி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர், தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட 11 சங்கங்களின் நிர்வாகிகள் 22 பேர் கலந்துகொண்டனர்.


திட்டமிட்டபடி போராட்டம்


ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில்  உடன்பாடு எட்டப்படவில்லை. தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவில் (டிட்டோஜாக்) இடம்பெற்றுள்ள சங்கங்கள் திட்டமிட்டபடி அக்டோபர் 13ஆம் தேதி டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டன.


இதைத் தொடர்ந்து இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாளை இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 


10 நாட்கள் நடந்த தொடர் ஆசிரியர் போராட்டம்


சென்னை நுங்கம்பாக்கம், டிபிஐ எனப்படும் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் டெட் ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்,  ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய 4 ஆசிரியர் சங்கங்கள், 3 வெவ்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி, 10 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டன. தொடர்ந்து அரசின் அறிவிப்புக்குப் பிறகு போராட்டங்களைத் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.