Watch Video: பெங்களூருவில் நடுரோட்டில் பெண் ஒருவரை யூபர் கார் ஓட்டுநர்  கடுமையாக தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வாகன சேவைகள்: 


பெருநகரங்களில் என்னதான் மெட்ரோ உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு இருந்தாலும், இன்றளவும் ஆட்டோ சேவை என்பது தவிர்க்க முடியாததாக தான் உள்ளது. குறிப்பாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பேருந்து, மெட்ரோ ரயில் போன்ற சேவைகளை காட்டிலும், குறிப்பிட்ட இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல ஆட்டோ, கார்கள் தான் பெரும்பாலான தேர்வாக உள்ளது.


இதற்காக ஓலா, யுபர், ரேபிடோ போன்ற நிறுவனங்கள் சேவைகளை வழங்கி வருகிறது. இருப்பினும், பைக் டாக்சி, கார் மீதான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, வாகனத்தில் வரும் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பதிவாகி உள்ளது.  இதனால், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இருப்பதில்லை எனவும், இந்த சேவையை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 


தவறான காரில் ஏறிய பெண்: 


இந்நிலையில், தவறான காரில் ஏறியதால், ஓட்டுநர் அந்த பெண் மற்றும் அவருடையே மகனை கொடூரமாக தாக்கியுள்ளார். இது சம்பந்தமான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடாக மாநிலம் பெங்களூர் பெல்லந்தூர் காவல் எல்லைக்குட்பட்ட போகனஹள்ளியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது.  இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார். அதில், "எனது மகனின் மருத்துவ பரிசோதனைக்காக எனது மனைவி மற்றும் எனது மகன் மருத்துவமனைக்கு செல்ல புறப்பட்டனர். அதற்காக யூபர் காரை புக் செய்தார். எங்கள் வீட்டின் முன்பும் காலை 11.05 மணியளவில் கார் ஒன்று நின்றுக் கொண்டிருந்தது.   






அப்போது, அந்த காரில் எனது மனைவி மற்றும் மகன் உள்ளே சென்று அமர்ந்திருந்தனர். பின்னர், தங்கள் புக் செய்த கார் இல்லையென்று எண்ணி அந்த காரில் இருந்து எனது மகன் முதலில் இறங்கியுள்ளார். அதன்பின், எனது மனைவியும் இறங்க முயன்றுள்ளார். அப்போது அந்த கார் ஓட்டுநர் எனது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். 


பெண்ணை அடித்த கார் ஓட்டுநர்:


அதோடு இல்லாமல் காரில் இருந்து வெளியேறி எனது மனைவியை, ஓட்டுநர் ஆக்ரோஷமாக அடித்துள்ளார். இதனை தடுக்க வந்த எனது மகனையும் கடுமையாக தாக்கியுள்ளார். தொடர்ந்து எனது மகன் மற்றும் மனைவியை தலையில் அடித்துள்ளதாக” பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகாரில் தெரிவித்துள்ளார். புகாரின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். அதில், மல்லேஸ்வரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பசவராஜு (25) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.