ராஜஸ்தானின் கரௌலி மாவட்டத்தில் இன்று நெஞ்சை உலுக்கும் செய்தி ஒன்று வெளிவந்தது. 11 வயது காது கேளாத வாய் பேச முடியாத சிறுமி பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரிக்கப்பட்ட நிலையில், சம்பவம் நடந்து 11 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள் சமூக ஊடகங்கள் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், ராஜஸ்தான் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றன. தற்போது #Bhajanlal_Sharma_Istifa_Do மற்றும் #Dimple_Meena_Ko_Nyaya_Do ஹேஷ்டேக்குகள் எக்ஸ் பக்கத்தில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளன.


முதற்கட்ட விசாரணையில், சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறிது நேரத்தில் அவரது அலறல் சத்தம் கேட்டு, வெளியே ஓடி வந்து அவரது தாய் பார்த்துள்ளார். அப்போது அந்த சிறுமி தன் தாயிடம் சைகைகளைப் பயன்படுத்தி, இரண்டு பேர் தனக்குத் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றதாக சிறுமி கூறியதாகத் தெரிகிறது. அவள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார். 



புகார் அளித்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை: 


5ம் வகுப்பு படித்து உயிரிழந்த சிறுமியின் தந்தை, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட துணை ஆட்சியரிடம் மனு ஒன்றை இன்று அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அந்த மனுவில் இன்று, “நான் 11 மே 2024 அன்று ஹிண்டான் சிட்டியின் நியூ மண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். யார் என்றே தெரியாத சில நபர்கள் எனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்திருக்கலாம் என காவல்துறையில் புகார் அளித்தேன்.


இதனை அடுத்து மகளை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தோம், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் எனது புகாரை காவல்துறையினர் பதிவு செய்யவில்லை” என தெரிவித்தார். 


மேலும் அந்த மனுவில், “தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் உள்ளது. இந்த சம்பவம் நடந்து 11 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால் இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


எனது மகள் இறப்பதற்கு முன், குற்றவாளிகளை அவர்களின் புகைப்படங்கள் மூலம் அடையாளம் கண்டுகொண்டாள். அதன் பிறகும் யாரும் கைது செய்யப்படவில்லை. நிபுணர் முன்னிலையில் எனது மகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் புதுமண்டி போலீசார் முழு அலட்சியம் காட்டினர். எனவே இந்த வழக்கை முழுமையாக விசாரித்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.” என தெரிவித்திருந்தார். 


காவல்துறையினர் கூறியது என்ன..? 


இதுகுறித்து காவல்துறை தனது ட்விட்டர் பதிவில், 'புதிய மண்டி ஹிண்டவுன் காவல் நிலையத்தின் கீழ் நடந்த, பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்ததை கருத்தில் கொண்டு, போலீஸார் உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ வசதிகளை வழங்கினர். சிறுமியின் தோல் மாதிரிகள் மற்றும் ஆடை மாதிரிகள் எஃப்எஸ்எல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விஞ்ஞான நிபுணர்களின் கருத்துப்படி, இந்த விஷயத்தில் முன்கூட்டியே ஆய்வு செய்யப்படும். சிறுமி காது கேளாத, வாய் பேச முடியாதவராக இருந்ததால், சைகை மொழி நிபுணர் உதவியுடன் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆதாரம் அடிப்படையிலான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் மர்மத்தை துடைக்க ராஜஸ்தான் காவல்துறை உறுதிபூண்டு அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. போலீசார் அறிவியல் முறையில் பாரபட்சமின்றி ஆய்வு நடத்தி வருவதால், இந்த சம்பவத்தின் உண்மைத்தன்மை மிக விரைவில் வெளிவரும்’ என தெரிவித்துள்ளனர்.