சேலம் மாவட்டம் ஜருகுமலை மற்றும் கந்தாஸ்ரமம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் நகருக்கள் புகுந்தது. இதனால் புறவழிச்சாலைகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாக பாதிக்கப்பட்டது. சேலத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நாள்தோறும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் தொடங்கிய மழை, தொடர்ந்து கனமழையாக மாறி கொட்டித் தீர்த்தது. சேலம் மாநகரப் பகுதிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள ஜருகுமலை, ஊத்துமலை, கந்தாஸ்ரமம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பெய்த கன மழை காட்டாற்று வெள்ளமாய் உருவெடுத்து நகருக்குள் பாய்ந்தது. இதனால், அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, உடையாபட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளமாக மாறி புறவழிச்சாலைகளில் புகுந்தது.
புறவழிச்சாலைகள் வெள்ளக்காடாக மாறிய நிலையில், சேலம்-சென்னை பிரதான சாலை, சேலம்-நாமக்கல் பிரதான சாலை, சேலம்-கோவை சாலை, சேலம்-பெங்களூர் சாலை என அனைத்து புறவழிச்சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏறத்தாழ 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும் அதே நேரத்தில் நகரப் பகுதிகளிலும் கனமழை பெய்ததால் போக்குவரத்தை உடனடியாக சீர் செய்ய முடியவில்லை. கந்தாஸ்ரமம் மலை பகுதியில் பெய்த கனமழை கன்னிமார் ஓடையில் காட்டாற்று வெள்ளமாக மாறி, அம்மாபேட்டை ஏரி வழியாக திருமணிமுத்தாற்றில் கலந்தது. திடீரென பெய்த கனமழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதேபோன்று சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சேலம் ஏற்காடு செல்லும் பிரதான மலை பாதையில் ஆங்காங்கே சிறிய அருவிகள் உருவாகியுள்ளது. இதனை ஏற்காடு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தும், செல்பி எடுத்து வருகின்றனர். குறிப்பாக, மலைப்பாதையில் தோன்றியுள்ள சிறிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆணைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழையால் காற்றாற்று வெள்ளம் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.