கர்நாடக மாநிலம் பெங்களூரு கங்காநகர் பகுதியை சேர்ந்தவர் 53 வயதான கே.எம்.பர்வேஷ் அகமது. இவர் பழைய வீட்டு உபயோக பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் சென்னையை சேர்ந்த இஸ்மாயில் என்பவரிடம் பொருட்களை வாங்கி பெங்களூருவில் விற்பனை செய்து வருகிறார்.
கடந்த மாதம் வழக்கம்போல சென்னையை சேர்ந்த இஸ்மாயிலை தொடர்பு கொண்ட போது, தற்போது என்னிடம் பொருட்கள் இருப்பு இல்லை என்று கூறிய இஸ்மாயில் வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த சங்கர் என்பவரை தொடர்பு கொள்ளும்படி அவரது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். சங்கரை தொடர்பு கொண்ட நிலையில் பர்வேஷ் அகமதுவை கடந்த 7-ந் தேதி காட்பாடியில் வந்து சந்திக்கும்படி சங்கர் கூறியுள்ளார். இதையடுத்து தனக்கு சொந்தமான காரில் நண்பர் மொகஜித்கானுடன் பெங்களூருவில் இருந்து பர்வேஷ் அகமது வேலூர் வந்து சங்கரை சந்தித்துள்ளார்.
போலீஸ் போல நடித்து ஏமாற்றிய கும்பல்:
அப்போது சங்கர், திருவலத்தில் பொருட்கள் உள்ள குடோன் இருப்பதாகவும், அங்கு செல்லலாம் எனது காரிலேயே அழைத்து சென்று மீண்டும் நானே அழைத்து வந்துவிட்டுவிடுகிறேன் என்று கூறி பர்வேஷ் அகமது, அவரது நண்பர் மொகஜித்கான் ஆகியோரை தனது காரில் ஏற்றிக்கொண்டு திருவலம் நோக்கி சென்றுள்ளார் சங்கர். அப்போது காரில் செல்லும்போதே வழியிலேயே காரில் வைத்து பர்வேஷ் அகமது ரூ.3 லட்சம் பணத்தையும், ரூ.2 லட்சத்துக்கான காசோலையையும் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து திருவலம் செல்லும் வழியில் அம்முண்டி அருகே சங்கரின் காரை காவல்துறையினர் சீருடையில் வந்த சீனிவாசன் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து நிறுத்தி நாங்கள் காவல்துறையினர் என கூறி விசாரிப்பது போல் நடித்து அனைவரையும் கீழே இறக்கிவிட்டு, பின்னர் திடீரென 5 பேரும் சங்கரின் காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பர்வேஷ் அகமது இது குறித்து காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காட்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் வழிபறியில் ஈடுபட்ட கும்பலை தீவிரமாக தேடிவந்துள்ளனர்.
பெண் உள்பட 8 பேர் கைது:
இந்நிலையில் விருதம்பட்டு பாலாற்று பாலம் அருகே விஷ்ணு திரையரங்கம் எதிரே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும்படியாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்த போது அதில் பயணித்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் தொடர் விசாரணை செய்ததில் காரில் வந்த நபர், பெங்களூர் வியாபாரியிடம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட சங்கர் மற்றும் அவனுடனான கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து முக்கிய குற்றவாளியான சங்கர் உட்பட சென்னை திருவெற்றியூர் முருகன், வேலூர் சேண்பாக்கம் சிவா, மற்றும் சந்தோஷ், காட்பாடி ஜாப்ராபேட்டை பொன்ராஜ், காவல்துறையினர் நடித்த வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த சீனிவாசன், சங்கரின் கார் ஓட்டுனரான ராணிப்பேட்டையை சேர்ந்த மணிவண்ணன், மற்றும் இவர்களுடன் ஆந்திரா நெல்லூரை சேர்ந்த பெண் லஷ்மி ஆகிய 8 பேரை கூண்டோடு கைது செய்த காவல் துறையினர்
அவர்களிடமிருந்து 7 லட்சத்து 40 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய நான்கு கார்கள் மற்றும் 33 விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை செய்தபோது இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியை சேர்ந்த மார்க்கபந்து என்கின்ற சங்கர் என்றும், இவன் பல்வேறு கொள்ளை மற்றும் கார் கடத்தல் போன்ற வழக்குகளில் தொடர்புடையதும் தனது கூட்டாளிகளை வைத்து வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.