தஞ்சாவூர்: தஞ்சையில் இருவேறு இடங்களில் வீட்டுக்குள் புகுந்து 75 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் காமாட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி கஸ்தூரி. ஆசிரியை. இவர்களின் மகள் இந்து பாரதி. இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி கஸ்தூரிக்கு சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நடந்தது. இதற்காக குடும்பத்தினர் அனைவரும் வீட்டை பூட்டிக் கொண்டு சென்னைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் கஸ்தூரியின் அம்மா சுசீலா ரெட்டிப்பாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டை திறந்து உள்ளே சென்றவர் பின்பக்க கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறை கதவுகள் திறக்கப்பட்டு பீரோவில் இருந்த நெக்லஸ், தோடு, வளையல், ஆரம், காசுமாலை, செயின் என்று 58 பவுன் நகைகள் மற்றும் 5 ஜோடி வெள்ளிக் கொலுசுகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து சுசீலா தனது பேத்தி இந்துபாரதிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சென்னையிலிருந்து விரைந்து வந்த இந்துபாரதி இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டில் தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். கொள்ளை போன தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ. 5.89 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் தஞ்சை அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் வீட்டில் 17 சவரன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் திருட்டு போனது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை அருகே சீனிவாசபுரம் திருநகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது யூசுப் (66). ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறவினர் விட்டு துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக முகமது யூசுப் குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு சிதம்பரத்திற்கு சென்றார். பின்னர் நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்துள்ளனர்.

வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. வீட்டின் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து ஆரம், நெக்லஸ், தோடு என மொத்தம் 17 சவரன் தங்க நகை மற்றும் ரூ.20 ஆயிரம் திருட்டு  போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து முகமது யூசுப் கள்ளப்பெரம்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.