தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைத் தூக்கிச் சென்று கரும்பு தோட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தில் பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வந்த 10 வயதுடைய சிறுமி 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணியைக் கொண்ட சிறுமியின் தாய், தந்தை இருவரும் குடும்ப வருமானத்திற்கு ஈரோட்டில் உள்ள செங்கல் சூலை ஒன்றில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
பெற்றோர் ஈரோட்டில் கூலித் தொழிலாளியாக இருப்பதால், அவர்கள் 10 வயது மகளைப் பாட்டி கவனித்துப் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமி வழக்கம் போல வீட்டின் அருகே கடந்த திங்கள்கிழமை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் 62 வயது முதியவர், சிறுமி தனியாக விளையாடிக் கொண்டிருந்ததை உணர்ந்து, யாருக்கும் தெரியாமல் சிறுமியைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் அவரது பெற்றோருக்குத் தெரிய வரவே பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வள்ளி தலைமையில் காவல் துறையினர் முதியவரை விசாரணைக்கு அழைத்து வந்து, குற்றம் சாட்டப்பட்டது குறித்து விசாரித்தனர். அப்போது சிறுமியை முதியவர் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டதால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் உத்தரவின் பேரில் கடலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.
இது குறித்து கடலூர் மாவட்ட பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வள்ளியை தொடர்பு கொண்டு பேசிய போது, 62 வயது முதியவரால் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதை உறுதி செய்தார். மேலும் அவர், "பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோட்டில் செங்கல் சூலையில் கூலித் தொழிலாளியாக இருக்கின்றனர். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி இவர்களின் மூத்த மகளாவார். சம்பவத்தன்று சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அன்றைய தினம் சிறுமியை யாருக்கும் தெரியாமல் அருகே உள்ள கரும்பு தோட்டத்திற்குத் தூக்கிச் சென்று, அங்கேயே பாலியல் வல்லுறவு செய்துள்ளார். சிறுமி காணாமல் போனது குறித்து அவரது இளைய சகோதரி தெரிவித்ததைத் தொடர்ந்து சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் முதியவர் பாலியல் வல்லுறவு செய்தது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் நம்முடன் இருக்கிறார்," என்று காவல் ஆய்வாளர் வள்ளி தெரிவித்துள்ளார்.