நெல்லை மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் துலுக்கர்பட்டி குளம் உள்ளது, இந்த குளத்தில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது, இந்த தகவலையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு குளத்தில் மிதந்த ஆண் பிணத்தை கரையில் கொண்டு வந்து சேர்த்தனர், அப்போது இளைஞர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டு இருப்பது தெரியவந்தது, இது குறித்த விசாரணையில் சிவந்திப்பட்டி அருகே உள்ள முத்தூரை சேர்ந்த சுப்பிரமணியன் (27) என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. அதன்படி மானூர் காவல் துறையினர் இறந்த நபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் நடத்த இடத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு கொலையில் தொடர்புடைய நபரை கைது செய்ய உத்தரவிட்டனர்.
இக்கொலை தொடர்பாக மானூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இக்கொலை தொடர்பாக குறுந்துடையார் புரத்தை சேர்ந்த அப்பாசாமி (40), ஆலங்குளத்தை சேர்ந்த இசக்கிமுத்து (23), அலங்காரத்தட்டை சேர்ந்த ராஜசேகர் (48), ஆலங்குளத்தை சேர்ந்த சரவணன் (30), ஜெயலெட்சுமி (43), மற்றும் சுந்தர் (18) ஆகியோரை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் ரஸ்தாவை சேர்ந்த முகேஷ் என்ற மூக்காண்டி என்பவரின் தம்பி ராஜபாண்டி வேலை முடித்து அவருடைய நண்பர்களுடன் இரு சக்கரவாகனத்தில் ரஸ்தா அருகே வந்துள்ளார். எதிரே குருந்துடையார் புரத்தை சேர்ந்த அப்பாசாமி என்பவரின் வளர்ப்பு மகன் சுந்தர் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது சுந்தர் ராஜபாண்டியின் இருசக்கர வாகனத்தை இடித்து விட்டு சென்றதால் முகேஷின் தம்பி ராஜபாண்டிக்கும், சுந்தருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டு உள்ளது.
இதனை மனதில் வைத்து கொண்டு ராஜபாண்டி, அவரது அண்ணன் முகேஷ், இறந்து போன சுப்பிரமணி மற்றும் அவர்களது நண்பர்களுடன் சுந்தரின் பன்றி பண்ணைக்கு சென்று சுந்தர் குடும்பத்தினரிடம் மேற்படி சம்பவம் தொடர்பாக தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பாசாமி சுப்பிரமணியனை, அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். மேலும் ராஜபாண்டி மற்றும் முகேஷ் காயமடைந்தனர், பின்னர் சுப்பிரமணியின் உடலை அந்த பகுதியில் உள்ள குளத்தில் வீசி விட்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 6 பேரை மானூர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.