ஆந்திரப்பிரதேசத்தில் கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. பொதுவாக கிரிக்கெட் உள்ளிட்ட ஆட்டங்களின்போது வாய் தகராறு ஏற்படுவது சகஜமான ஒன்று தான். ஆனால் இது சில நேரங்களில் கைகலப்புக்கு வழிவகுக்கிறது. அப்படியான ஒரு சம்பவம் தான் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றிருக்கிறது.  அங்குள்ள அரிலோவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெடகடிலி பகுதியில் சிறுவர்கள் முதல் இளம் வயதினர் வரை கூட்டம் கூட்டமாக கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். காலை முதல் மாலை வரை அந்த பகுதியில் உள்ள மைதானங்கள் நிரம்பி வழியும் அளவுக்கு பலரும் தங்கள் நேரத்தைச் செலவிடுகின்றனர்.  

இந்த நிலையில் ஏப்ரல் 5ம் தேதி விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையில் விநாயகா நகர், சக்கலிபேட்டை மற்றும் பெடகடிலி பகுதிகளைச் சேர்ந்த மூன்று அணிகள் ஒரு தொடரில் விளையாட முடிவு செய்தன. அதன்படி விநாயகா நகர் மற்றும் சக்கலிபேட்டை அணிகளுக்கு இடையே போட்டியானது நடைபெற்றது. இதில் வெற்றி பெறும் அணி பெடகடிலி அணியுடன் மோதுவதாக இருந்தது. 

Continues below advertisement

அந்த வகையில் விநாயகா நகர் மற்றும் சக்கலிபேட்டை அணிகளிடையே போட்டி நடைபெறும்போது பெடகல் அணி வீரர் ஒருவர் நடுவராக பணியாற்றினார். டோலா அஜித் என்ற பெட்டா என்ற நபர் பேட்டிங் செய்துக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு அருகாமையில் பாக்சர் கிஷோர் என்ற நபர் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இரு அணி வீரர்களிடையே  ஒரு ரன் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. போட்டிக்கு நடுவராகச் செயல்பட்ட சிரஞ்சீவி அதனை தீர்த்து வைத்தார். ஆனால் இதனையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கிஷோர் திடீரென சிரஞ்சீவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இதனைக் கண்டு ஆத்திரமடைந்த அஜித் கிஷோரிடம் சென்று ஏன் சண்டை போடுகிறார் என கேள்வியெழுப்பினார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்தவர்கள் சமாதானம் செய்து அஜித் மற்றும் கிஷோரை சமாதானம் செய்தனர். அனைத்து வீரர்களும் வீட்டுக்கு சென்று விட்ட நிலையில் அன்று மாலை விசாலாட்சி நகர் இல்லத்தில் வசித்து வந்த கிஷோர், அப்பகுதிக்கு வந்த அஜித்துடன் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த கிஷோ தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது மார்பில் குத்தினார்.  இதனை தடுக்க முயன்ற நாகு என்ற இளைஞருக்கும் கத்திக்குத்து விழுந்தது.  இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த அஜித் அங்கேயே சரிந்து விழுந்து மயங்கினார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

அரிலோவா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அஜித்  உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கிஷோரை கைது செய்தனர்.