கரூரில் பட்டப்பகலில் குடியிருப்புகள் நிறைந்த தெருவில் நடந்து சென்ற போது, மர்ம நபர்கள் செயினை பறித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவரிங் செயினை பறித்துக் கொண்டு ஸ்டைலாக இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் EL டைப் வீட்டில் வசிப்பவர் பிச்சைமணி. இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 65). இவர் இதே பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவர் வீட்டில் சமையல் வேலை செய்து வருகிறார். 




நேற்று காலை 11.45 மணியளவில், வழக்கம் போல் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அதே பகுதியில் L டைப் வீட்டிற்கு அருகில் சென்று கொண்டிர்ந்த போது ஒரு இளைஞர் தனியாக நடந்து செல்கின்றார். அவரை தொடர்ந்து ஹெல்மெட் அணிந்த இளைஞர் இரு சக்கர வாகனத்தில் அந்த மூதாட்டியை கடந்து செல்கின்றார். 





முன்னால் நடந்து சென்ற அந்த இளைஞர் திரும்பி நடந்து வந்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு வேகமாக ஓடி, ஏற்கனவே தயாராக இரு சக்கர வாகனத்தில் காத்திருந்த இளைஞரின் பின்னால் ஸ்டைல்லாக குதித்து அமர்ந்து மின்னல் வேகத்தில் பறந்து சென்று விட்டனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பயந்து போய் மூதாட்டியை  விசாரித்த போது அது கவரிங் செயின் என கூறியதால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாந்தோன்றிமலை போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர். 




பட்டபகலில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இப்பகுதிகளில் இது போன்ற செயின் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள், பகலில் தனியாக வெளியில் செல்வதையும், தனியாக நடந்து அல்லது இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது தங்க நகைகளை அணிவதை தவிர்த்து வருவதாக தெரிவிக்கின்றனர்.






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண